தியுயர் பாதுகாப்பு என்ற பெயரில் மீண்டும் காணிகளை கபளீகரம் செய்வது பேரினவாதத்தின் திட்டமிட்ட சதியாகும் என இ.தொ.கா. வின் வன்னி மாவட்ட அமைப்பாளர் எஸ்.கோவிந்தராஜ் தெரிவித்தார்.
வவுனியா, கணேசபுரத்தில் இ.தொ.கா. வின் மக்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடாந்தும் தெரிவிக்கையில்,
புதிய ஆட்சி அமைப்பதற்குத் தீர்மான சக்தியாக இருந்த வட., கிழக்கு தமிழர்களின் இப்பிரச்சினை விஸ்வரூபமெடுத்து கொழுந்துவிட்டு எரிகின்றதற்கு சாதகத்தீர்வினை பெற்றுக்கொடுப்பது அரசின் கடமை என்பதை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல தமிழ் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுப்பது இம்மக்களுக்கு செய்யும் சமூக வரலாற்றுக் கடமையாகும்.
இன்றைய அரசு வலிகாமம் வடக்கில் 100 நாட்களில் 1100 ஏக்கர் காணியை விடுவிப்பதாக வாக்குறுதியளிக்கப்பட்டு இன்றுடன் 80 நாட்களாகின்றது. ஆனால் சிறியளவு காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன.
பெரும்பகுதி மிகுதி நாட்களில் விடுவிக்கப்படுமா என்பது காணிக்கு உரிமையான மக்கள் மத்தியில் உள்ள விஸ்வரூபமான கேள்வியாகும். தினசரி நாளிதழ்களில் ஊர்ஜிதப்படுத்துகின்ற செய்திகளின் படி பெரும்பகுதியான பல ஏக்கர் காணிகள் தொடர்ந்து இராணுவ வசமுள்ளதாக அறிய முடிகின்றது. எனவே ஆண்ட, ஆளும் அரசுக்குள் மிக காத்திரமாகவும் நாசுக்காகவும் வட., கிழக்கு தமிழர்களது சொந்தக் காணிகளை சுவீகரிப்பதில் வெற்றி கண்டுவருவது குறிப்பிடத்தக்கது ஆட்சி மாற்றத்தினூடாக தங்களின் கஷ்டங்கள், துன்ப துயரங்களுக்குக்குத் தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கை இன்று தமிழர்கள் மத்தியில் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. அரசு தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதில் கையாளுகின்ற விதமே இதற்கு காரணமாகவுள்ளது. தமிழர்களின் காணிகளை இராணுவத்திற்காக அரசு சுவீகரிப்பதன் தாற்பரியத்தை உணர்ந்து அரசு உறுதியளித்தவாறு இதற்கான தீர்வினை வழங்குமாறு வலியுறுத்துவது சகல தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் உள்ள தார்மீகக் கடமையாகும் என்றார்.
Social Buttons