பிரிட்டன் நாட்டின் தலைநகரான லண்டனின் மத்திய பகுதியில் இன்று மின்கசிவு காரணமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இத்தீவிபத்தால் நச்சு புகை ஏற்பட்டதன் காரணமாக பாதுகாப்பு கருதி 2000 பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இவ்விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அருகே தான் இந்திய தூதரகம் அமைந்துள்ளது.
ஹோல்போர்ன் பகுதியில் உள்ள கிங்ஸ்வே நடைபாதைக்கு கீழே சாக்கடை மூடியில் இருந்து வெளியேறிய தீ காரணமாக, அப்பகுதியில் இருந்த அனைவருக்கும் சுவாச கோளாறு ஏற்பட்டது.
இதனால் அங்கு பெரும் குழப்பம் காணப்பட்டது. அப்பகுதியில் உள்ள தியேட்டர்களில் தி லயன் கிங், சார்லி அண்ட் தி சாக்லேட் பாக்டரி ஆகிய திரைப்படங்களின் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
மேலும் அப்பகுதியில் பணியிலிருந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் என 2000 பேர் உடனடியாக அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
உடனடியாக தீயணைப்பு வண்டிகள் அப்பகுதிக்கு விரைந்து வந்தன. மின்கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் வரை தீயை அணைக்காமல் தீயணைப்பு துறையினர் காத்திருக்க வேண்டியதாயிருந்தது.
மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பின் 10 தீயணைப்பு வண்டிகளும், 70 தீயணைப்பு வீரர்களும் தீயை அணைக்க போராடி வருகின்றன. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Social Buttons