Latest News

April 09, 2015

20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுப் படுகொலை-பொதுநலன் வழக்கு தொடர சுப்ரீம் கோர்ட் அனுமதி!
by Unknown - 0


ஆந்திராவில் 20 தமிழகத் தொழிலாளர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக பொதுநலன் வழக்கு தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. திருப்பதி அருகே 20 தமிழர்களை ஆந்திரா காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தது. 

இது தமிழகம், ஆந்திரா, புதுவையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச்சை அணுகி இச்சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் தானே முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த கோரினார்.

ஆனால் தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் இதனை நிராகரித்து, இது தொடர்பாக நீங்கள் பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்யுங்கள். நாங்கள் விசாரிக்கிறோம் என்று தெரிவித்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, 20 தமிழர்கள் கொல்லப்பட்டது திட்டமிட்டு நடத்தப்பட்ட என்கவுன்டர். 

இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். இது குறித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். இது சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு உத்தரவின்றி நடந்திருக்க முடியாது. இதனை தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச்சிடம் தெரிவித்தேன். ஆனால் தலைமை நீதிபதியோ பொதுநலன் மனுவைத்தாக்கல் செய்யுங்கள் விசாரிக்கிறேன் என கூறியிருக்கிறார் என்றார். இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.

« PREV
NEXT »