Latest News

April 26, 2015

போரில் வெற்றி பெற்ற போதும் அமைதியை இன்னமும் வெற்றி கொள்ளவில்லை - செல்வா நினைவுப் பேருரையில் சந்திரிகா
by admin - 0

சிறிலங்கா போரில் வெற்றி பெற்ற போதும், அமைதியை இன்னமும் வெற்றி கொள்ளவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட, கட்சியின் நிறுவுனரான எஸ்.ஜே.வி.செல்வநாயகம், நினைவுப் பேருரையை நிகழ்த்திய போதே, சந்திரிகா குமாரதுங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது உரையில், “நாம் இன்று போரில் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால் இன்னமும் அமைதியை வெற்றி கொள்ளவில்லை.

ஒரு மோதல் அல்லது போரின் முடிவு, அமைதியைக் கொண்டு வர வேண்டியது அவசியமில்லை. வெறுமனே போர் இல்லாத நிலைமையை அமைதி எனக் கொள்ள முடியாது.

வெற்றியை விட அமைதி மிகவும் இன்றியமையாதது.  பல போர்களின் வெற்றி,  அமைதியைக் கட்டியெழுப்பும் நோக்கத்தைக் கொண்டதாக இருக்கவில்லை.

 வரலாற்றில் யார் என்ன தவறு செய்தது என்று  நினைவுபடுத்திக் கொண்டிருக்க முடியாது. அணுகுமுறைகளையும், ஆழமான அச்சங்களையும் மாற்றிக் கொண்டு, முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு ஒரு முழுமையான அணுகுமுறை தேவைப்படுகிறது.

சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு அமைதியான அரசியல் தீர்வைக் காண்பதற்கு செல்வநாயகம் முயற்சித்தார் என்பது எமக்குத் தெரியும்.

பண்டாரநாயக்க – செல்வநாயகம், உடன்பாடு, டட்லி- செல்வநாயகம் உடன்பாடு என்பன நடைமுறைப்படுத்தப்படாமல் தடுக்கப்பட்டன.

எனது தந்தையான பண்டாரநாயக்கவினால், கொண்டு வரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டத்தை சிலர் சிங்கள மேலாதிக்கத்தை் நிலைநாட்டுவதற்கான உறுதிப்பாடாகவே பார்த்தனர். என்னால் அவ்வாறு பார்க்க முடியவில்லை.

தற்போதைய அரசாங்கம், காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வது, குறிப்பாக பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவது,போரின் இறுதிக்கட்டத்தில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதன் மூலம், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவது, தமிழர்களுக்கு சமவாய்ப்புகளை வழங்கும் வகையில், எல்லோரும் ஏற்றுக் கொள்ளத்தக்க நிலையான அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவது ஆகிய விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments