சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள தாலிஅகற்றும் போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். மேலும் மத கலவரத்தை தூண்டியதாக, திராவிட கழக தலைவர் கி.வீரமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாலி அகற்றும் போராட்டம்திராவிட கழகதலைவர் கி.வீரமணி, சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழ் புத்தாண்டு தினத்தன்று தாலி அகற்றும் போராட்டமும், மாட்டுக்கறி உணவு சாப்பிடும் போராட்டமும் நடைபெறும் என்று அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்புக்கு இந்து முன்னணி, இந்துமக்கள் கட்சி, அகில இந்திய இந்து மகாசபா, சிவசேனா போன்ற இந்து அமைப்புக்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்து அமைப்புகள் சார்பில், திராவிட கழகம் அறிவித்துள்ள போராட்டத்தை தடை செய்ய வேண்டும் என்றும், போராட்டத்தை அறிவித்துள்ள திராவிட கழக தலைவர் கி.வீரமணி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டன. பேராட்டத்தை கைவிட சில அரசியல் கட்சிகளும் வேண்டுகோள் வைத்தன.
இந்த நிலையில் இந்துமகா சபா அமைப்பின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, ஐகோர்ட்டு ஒரு உத்தரவை பிறப்பித்தது. இந்து மகா அமைப்பின் சார்பில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் என்றும், அந்த புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வழக்குப்பதிவுஐகோர்ட்டு உத்தரவு அடிப்படையில், இந்துமகாசபா அமைப்பின் துணை தலைவர் தனசேகரன்,வெள்ளிக்கிழமை அன்று இரவு,சென்னை வேப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், ஏப்ரல் 14–ந்தேதி தமிழ் புத்தாண்டு தினத்தன்று, சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள தாலி அகற்றும் போராட்டத்தை தடை செய்ய வேண்டும் என்றும், அந்த போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ள திராவிட கழக தலைவர் கி.வீரமணி மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த புகார் அடிப்படையில், வேப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு, திராவிட கழக தலைவர் கி.வீரமணி மீது நேற்று பகலில் வழக்குப்பதிவு செய்தார். இ.பி.கோ.153(ஏ),295(ஏ),505(1)(பி)(சி–சி),505(2)ஆகிய 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டது. புனிதமாக கருதப்படும் மத உணர்வுகளை புண்படுத்தி, கலவரத்தை தூண்டி விட்டு, பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்தல், உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தடை உத்தரவுவழக்கு போட்ட அடுத்த கணமே, திராவிட கழகம் அறிவித்து இருந்த தாலிஅகற்றும் போராட்டத்திற்கு போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தடை விதித்து ஆணை பிறப்பித்தார். சென்னை போலீஸ் சட்டப்பிரிவு 41–ன் கீழ் இந்த தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது.
போலீஸ் கமிஷனரின் இந்த தடை ஆணை நகலை, நேற்று பிற்பகலில் வேப்பேரி உதவி போலீஸ் கமிஷனர் அய்யப்பன், வேப்பேரி பெரியார் திடலுக்கு சென்று, திராவிட கழக துணை தலைவர் கலிபூங்குன்றனிடம் வழங்கியதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வீரமணி அறிக்கைதாலி அகற்றும் போராட்டத்திற்கு தடை விதித்து போலீசார் பிறப்பித்த ஆணை தொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘போலீசாரின் ஆணையை எதிர்த்து சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை கழகத் தோழர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்று கூறப்பட்டுள்ளது.
No comments
Post a Comment