Latest News

April 10, 2015

மும்பைத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி பிணையில் விடுதலை!
by Unknown - 0


மும்பைத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி என்று இந்திய அரசால் குற்றம்சாட்டப்படும் ஜக்கியுர் ரஹ்மான் லக்வி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து அவர் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

லாகூர் நீதிமன்றம் இவருக்குப் பிணை வழங்கியதையடுத்து இவர் ராவல்பிண்டி சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டார். மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானில் வழக்கை எதிர்கொள்ளும் ஏழு பேரில் இவரும் ஒருவர்.

பாகிஸ்தானின் இந்த முடிவு ஏமாற்றமளிப்பதாக இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். லக்வி விடுவிக்கப்பட்டதற்கு எதிராக இந்தியர்கள் பலர் சமூக வலைத்தளங்கள் மூலமாக தமது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2008 ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடைபெற்ற தாக்குதலில் குறைந்தது, 166 பேர் கொல்லப்பட்டனர். மும்பையில் உள்ள ஒரு ரயில் நிலையம், யூத வழிபாட்டிடம், வெளிநாட்டவர்கள் அதிகம் வரும் ஒரு உணவு விடுதி மற்றும் இரண்டு நட்சத்திர ஒட்டல்கள் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டன.

இந்த தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தானிலிருந்து கடல் மார்கமாக வந்தனர் என்று இந்திய அரச தரப்பு கூறியது.

இந்த தாக்குதலை ஒருங்கிணைத்து நடத்தியதில் லக்வி முக்கியப் பங்காற்றியதாகவும் அவரை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இந்தியா கோரியது.

இதை நிராகரித்த பாகிஸ்தான், இந்தியா உரிய ஆவணங்களைக் கொடுத்தால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறிய பாகிஸ்தான், லக்வியைக் கைது செய்து வழக்குத் தொடர்ந்தது.

« PREV
NEXT »