Latest News

April 19, 2015

அர்ஜுன மகேந்திரனுக்கு நேரடி தொடர்பு இல்லை-மூவரடங்கிய குழு அறிக்கை!
by Unknown - 0

திறைசேரி முறிகள் சர்ச்சையில் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் நேரடி பங்களிப்பு செலுத்தியமைக்கான எவ்வித ஆதாரங்களும் இல்லையென இது தொடர்பில் விசாரணை நடத்திய மூவரடங்கிய குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

மத்திய வங்கியின் திறைசேரி முறிகள் விநியோகத்தின் போது எழுந்த சர்ச்சை குறித்து ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்றை நியமித்திருந்தார்.

இந்த குழு தனது 19 பக்க அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையின்படி, மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் திறைசேரி முறிகள் தொடர்புபட்ட விடயத்தில் நேரடி பங்களிப்பு செலுத்த வில்லையென்றே உறுதிபட தெரிவிக்கப் பட்டுள்ளது. அதேநேரம், அரச கடன் திணைக்களத்தின் செயற்பாடுகள் உடனடி அமுலுக்கு வரும் வகையில் திருத்தமாக மேற்பார்வை செய்யப்படுவதுடன் கண்காணிப்பு பொறிமுறையொன்று அவசியமெனவும் கூறியுள்ளது.

இது தொடர்பில் கொள்கை திட்டமிடல், பொருளாதார அலுவல்கள்,

சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு நேற்று செய்தி அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டி ருந்ததாவது, மத்திய வங்கியின் 30 வருடங்களுக்கான திறைசேரி முறிகள் விநியோகமானது, வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சியிலிருந்து விலகியிருப் பதாக எழுந்த குற்றச்சாட்டினை விசாரிப்பதற்காக சிரேஷ்ட சட்டத்தரணிகள் மூவரடங்கிய குழுவொன்று நியமிக் கப்பட்டது.

மேற்படி மூவர் கொண்ட குழுவானது மத்திய வங்கி ஆளுநர், அதிகாரிகள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையான தனிநபர்களை நேரில் சந்தித்து அவர்களது கருத்துகளை பெற்றிருந்தது.

அரச கடன் திணைக்களத்தின் செயற் பாடுகள் குறித்தும் இந்த குழு கண்காணித் திருந்தது. அரசாங்கத்தின் நுட்பமான விடயங்களை கையாண்டு வரும் ஒரு திணைக்களமென்ற வகையில் இதன் செயற்பாடுகள் யாவும் உடனடி அமுலுக்கு வரும் வகையில் திருத்தமாக மேற்பார்வை செய்யப்பட வேண்டியதுடன் இதற்கென கண்காணிப்பு பொறிமுறையொன்று அவசியமெனவும், குழு தனது 19 பக்க அறிக்கையில் சிபாரிசு செய்துள்ளது.

ஒரு பில்லியன் ரூபாவுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டிய திறைசேரி முறிகள் 10 பில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்பட்ட விடயத்தில் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் நேரடியாக தொடர்புபடவில்லை. இதற்காக அரச கடன் திணைக்களம் 2015 மார்ச் 02 ம் திகதி 13.55 பில்லியன் ரூபாவினை அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளது.

இதேவேளை நாணய சபையின், 4/2015 இலக்க அறிக்கையிலும் 30 வருட திறைசேரி முறியினை விநியோகிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ள போதும் அதன் பெறுமதி நாணய சபையினால் தீர்மானிக்கப்பட்டிருக்கவில்லை.

இது குறித்த செயற்பாடுகளை அரச கடன் திணைக்களமே முன்னெடுத்துள்ளது. தீர்மானங்கள் யாவும் விலை மனு குழுவின் 08 அங்கத்தவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் விலை மனு குழுவின் ஒரு அங்கத்தவர் அல்லர்.

மேலும் அரச கடன் திணைக்களத்தினதும் விலை மனு குழுவினதும் செயற்பாடுகளில் மத்திய வங்கி ஆளுநர் நேரடியாக தொடர்பு பட்டதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லையென்றும் குழு தனது அறிக்கையை முடித்துக் கொண்டுள்ளது.

அத்துடன் திறைசேரி முறிகள் விநியோக சர்ச்சையில் வழமைக்கும் மாறாக தொடர்புபட்டுள்ள இலங்கை வங்கியின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டுமெனவும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

சட்டத்தரணி காமினி பிட்டிபான தலைமையில் சட்டத்தரணி மஹேஷ் களுகம்பிட்டிய, சட்டத்தரணி சந்திமல் மெண்டிஸ் ஆகியோர் அடங்கிய குழுவே இந்த விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்பித்துள்ளது.
« PREV
NEXT »

No comments