யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் மூன்றாம் கட்டமாக இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள பகுதியில் 100 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டிருக்கின்ற இரண்டு இராணுவ முகாம்களையும் அகற்ற வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருக்கின்றது.
இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பொதுமக்களுடைய வாழ்விடமாகிய வலிகாமம் வடக்கின் 6400 ஏக்கர் காணிகள் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது.
அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பொதுமக்கள், இருப்பதற்கு நிரந்தர இடமின்றி பிறருக்குச் சொந்தமான பொதுக்காணிகளில் கொட்டில்களை அமைத்து வாழ்ந்து வருகின்றார்கள். பலர் வாடகை வீடுகளில் குடியிருந்து வருகின்றார்கள்.
இந்தப் பிரதேசத்தில் ஆயிரம் ஏக்கர் காணிகளை, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப் போவதாக அறிவித்திருந்த அரசாங்கம் மூன்றாம் கட்டமாக வறுத்தலைவிளான் பகுதியில் ஒரு தொகுதி காணிகளை விடுவித்திருக்கின்றது.
அந்தப் பகுதியில் மீள்குடியேறுவதற்காக ஆவலோடு சென்றவர்களில் பல குடும்பங்களின் காணிகளில் இராணுவம் முகாம் அமைத்திருப்பதைக் கண்டு, செய்வதறியாமல் மீண்டும் தமது தற்காலிக இடங்களுக்கே திரும்பியிருக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.
மக்கள் மீள்குடியேறும் வகையில் அங்குள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
பல வருடஙகளின் பினனர் மீள்குடியேறுவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ள பகுதியில் இவ்வாறு இராணுவம் நிலைகொண்டிருப்பது அவர்களின் மீள்குடியேற்றத்திற்கு உகந்ததல்ல எனவும் அவர் கூறுகிறார்.
No comments
Post a Comment