Latest News

April 21, 2015

வல்லாதிக்க சக்திகெதிராகப் பட்டினிப்போர் தொடுத்த நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி நினைவு நாள்
by admin - 0


நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியம்மா அவர்களின் இருபத்தேழாம் ஆண்டு நினைவுநாளான ஏப்ரல் திங்கள் 19ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணி தொடக்கம் மாலை ஆறு மணிவரை London Trafalgar Square இல் உணவுத்தவிர்ப்புக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

இந்திய இராணுவம் அமைதிப்படை என்னும் போர்வையில் தமிழீழ மண்ணில் கால் பதித்துப் பின்னர் ஆக்கிரமிப்புப் போர் நடாத்திய காலப்பகுதியில், இந்திய இராணுவம் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் தமிழீழ மண் மீட்புக்காகப் போராடும் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன் வைத்து அறத்தீ வளர்த்து, சாகும்வரை பட்டினிப் போராட்டம் நடத்தித் தன்னுயிரை ஈந்தார் அன்னை பூபதியம்மா.

மட்டு - அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளரான அன்னை பூபதியம்மா தடைகள் கண்டு தயங்காமல் ஆதிக்கத்தின் பயமுறுத்தல்களுக்கு அடிபணியாமல் உறுதியாக அன்னம் தவிர்த்து நீராகாரம் மட்டும் அருந்தித் தனது போராட்டத்தை முன்னெடுத்தார். சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமிருக்கிறேன்.

எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது எனக் கடிதம் எழுதி வைத்து விட்டு இந்திய வல்லாதிக்கத்தை எதிர்த்துப் போராடினார் பூபதியம்மா அவர்கள்.

நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் நினைவுநாளில் அவ்வீரத்தாயின் நினைவுகளை அகத்திலிருத்தி, வல்லாதிக்க அரசுகளின் துணையோடு சிறீலங்கா அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டும் தமிழீழத்தை மீட்டெடுப்பதற்கான சர்வசன வாக்கெடுப்பை நடத்த வலியுறுத்தியும் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் ஆகியோர் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அங்கு கூடியிருந்த வேறு மொழி பேசும் மக்களும் இக்கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பாகக் கேட்டறிந்தனர்.

« PREV
NEXT »

No comments