ஸ்மார்ட்போன்களில் ஈ-மெயில் பார்ப்பதும் பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்வதும், கூகுளில் தகவல்களை தேடுவதும் இப்போது அதிகரித்துள்ளது. ரகசிய தகவல்களை திருடும் வைரஸ் புரோகிராம்களை பல வழிகளில் நமது மொபைல்களில் நுழைத்து இணைய நடவடிக்கைகளை உளவு பார்க்கும் மால்வேர்கள் ஆன்ட்ராய்டு மொபைல்களை குறிவைக்க துவங்கியது. பொதுவாக, ஆப்ஸ் வழியாகவே இந்த மால்வேர்கள் பரவி வருகின்றன. இது பிரபல மொபைல் இயங்குதளமான ஆண்ட்ராய்டுக்கு பெரிய சவாலாக இருந்தது.
இந்நிலையில், மொபைல் பிளாட்பார்மில் செக்யூரிட்டி அப்கிரேடுகளை அதிகரித்துள்ள கூகுள் வைரஸ்களின் தாக்குதல்களை சென்ற ஆண்டை விட 50 சதவீதம் அளவுக்கு குறைத்திருப்பதாக அறிவித்துள்ளது. குறிப்பாக, 2014-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, உலகம் முழுவதும் சுமார் 1 பில்லியன் ஆண்ட்ராய்டு கருவிகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் கூகுள் பிளே வழியாக ஒரு நாளைக்கு 200 மில்லியனுக்கும் அதிகமாக செக்யூரிட்டி ஸ்கேன்கள் செய்யப்படுகின்றன. கூகுள் பிளே பரிந்துரைத்துள்ள ஆப்ஸ்களை மட்டுமே பயன்படுத்தினால் மால்வேர் தாக்குதல்கள் மிகக்குறைவாகவே இருக்கும் என கூகுள் தெரிவித்திருக்கிறது.
உலகம் முழுவதும் 80 சதவீத ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தையே பயன்படுத்துகிறது. ஆனால், நீண்ட நாட்களாக ஆண்ட்ராய்டில் பாதுகாப்பு குறைவாக உள்ளதாக பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க களமிறங்கிய கூகுள் இப்போது மால்வேர்களை கட்டுப்படுத்தியிருக்கிறது.
Social Buttons