2050ஆம் ஆண்டில், உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள் இந்தியாவில்தான் இருப்பார்கள் என ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. அதேபோல, தற்போதைக்கும் 2050க்கும் இடையில் இந்துக்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரிக்கும் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலுள்ள ப்யூ ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் உலக மதங்களின் எதிர்காலம் என்ற விரிவான ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
உலக அளவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களில் மக்கள் தொகைப் பெருக்க விகிதம் அதிகமாக இருப்பதும் இஸ்லாமியர்களில் 34 சதவீதம் பேர் 15 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதுமே இதற்குக் காரணம் என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
எதிர்காலத்தில் இந்தியாவில் இந்துக்கள்தான் பெரும்பான்மையினராக இருப்பார்கள் என்றாலும், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்களும் இந்தியாவில்தான் வசிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. தற்போது இந்தோனேஷியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை வட இந்தியாவில்தான் மக்கள்தொகைப் பெருக்கம் அதிகம். இந்தியாவில் இஸ்லாமியர்கள் அதிகம் வட இந்தியப் பகுதியில்தான் வசிக்கிறார்கள் என்பதால், இதில் ஆச்சரியமடைய ஏதுமில்லை என்கிறார் சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியரான டாக்டர் ஜெயராஜ்.
இந்த காலகட்டத்தில் உலக அளவில் இந்துக்களின் மக்கள் தொகை 34 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. 100 கோடிக்கும் சற்று அதிகமான இந்து மக்கள் தொகை, 140 கோடியா அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
2050ல் உலகில் மூன்றாவது பெரிய மதமாக இந்து மதம் இருக்கும். உலக மக்கள் தொகையில் 14.9 சதவீதம் பேர் இந்துக்களாக இருப்பார்கள். எந்த மதத்தையும் சாராதவர்கள் அதற்கு அடுத்த இடத்தில், அதாவது 13.2 சதவீதம் பேர் இருப்பார்கள்.
இப்போது, எந்த மதத்தையும் சாராதவர்கள்தான் மூன்றாவது இடத்தில் இருக்கின்றனர்.
இந்துக்களைப் பொறுத்தவரை, ஒரு பெண் 2.4 குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார். மேலும், 30 சதவீத இந்துக்கள் 15 வயதுக்குக் கீழ் உள்ளனர். ஆனால், 15 வயதுக்குக் கீழ் இருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை இதைவிட அதிகம்.
2050 வாக்கில் ஐரோப்பாவில் இருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை இருமடங்காகியிருக்கும் என்றும், 2070ல் உலக அளவில் அவர்கள் கிறிஸ்தவர்களைவிட அதிகமாக இருப்பார்கள் என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மக்களின் நலன் அதிகரிக்க அதிகரிக்க, மக்கள் தொகைப் பெருக்கம் என்பது கட்டுப்படும் என்கிறார் ஜெயராஜ். வரும் சில தசாப்தங்களில் வட அமெரிக்காவில் இந்துக்களின் மக்கள் தொகையானது தொடர்ந்து அதிகரித்து, இரு மடங்காகும் என இந்த ஆய்வு கூறுகிறது. தற்போது 0.7 சதவீதமாக இருக்கும் இந்துக்கள், 2050ல் 1.3 சதவீதமாக இருப்பார்கள்.
இடம்பெயர்ந்து செல்லும் இந்துக்களே இதற்குக் காரணமாக இருப்பார்கள். அதைவிட்டுவிட்டுப் பார்த்தால், இந்துக்களின் எண்ணிக்கை வட அமெரிக்காவில் இதே அளவிலேயே நீடிக்கும் என்றும் இந்த ஆய்வு கூறியுள்ளது.
புத்த மதத்தைப் பொறுத்தவரை, 2010ல் எந்த எண்ணிக்கையில் இருந்ததோ, அதே எண்ணிக்கை நீடிக்கும்.
இந்த ஆய்வின் முடிவுகள் நிகழ்வதற்கே வாய்ப்பு இருக்கிறது என்றாலும், இது இயல்பான மாற்றம்தான் என்கிறார் ஜெயராஜ். உலகில், ஒவ்வொரு மதத்திலும் தற்போது இருப்பவர்களின் எண்ணிக்கை, எந்தெந்தப் பகுதிகளில் வசிக்கிறார்கள், அவர்களுடைய வயது, பிறப்பு விகிதம், இறப்பு விகிதம், சர்வதேச அளவில் இடம்பெயர்தல், மதமாற்றம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்டிருப்பதாக ப்யூ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Social Buttons