Latest News

April 12, 2015

என்கவுண்டர்: நீதி விசாரணைக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு! ஆந்திர அரசுக்கு சிக்கல்
by admin - 0

தமிழகத்தை சேர்ந்த 20 பேரை ஆந்திர போலீசார் சுட்டுக் கொலை செய்த விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது தேசிய மனித உரிமைகள் ஆணையம். ஆந்திராவில் தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரித்து வருகிறது. ஆணையத்தின் முன்னிலையில் ஆஜராகி திருவண்ணாமலையை சேர்ந்த சேகர், தர்மபுரியை சேர்ந்த பாலச்சந்திரன் ஆகியோர், இன்று வாக்குமூலம் அளித்தனர்.
மனித உரிமைகள் ஆணையம்

இவர்களை மதுரையை சேர்ந்த பீப்பிள் வாட்ச் என்ற மனித உரிமை அமைப்பு பாதுகாத்து வருகிறது. இதனிடையே மற்றொரு சாட்சியான ஜவ்வாது மலை பகுதியை சேர்ந்த இளங்கோ, அடையாள அட்டை பிரச்சினை காரணமாக செல்லவில்லை. இவர் ஆந்திர போலீஸ் மீதான அச்சத்தின் காரணமாகவும் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்த வழக்கில், இம்மூவரின் சாட்சியம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விசாரணைக்கு பிறகு மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களில் ஒருவரான நீதிபதி முருகேசன் அளித்த பேட்டி: 

சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தின் முழு விவரத்தை வெளியில் சொல்ல முடியாது. அதேநேரம், மூன்றாவது சாட்சியான இளங்கோ டெல்லி வராத நிலையில், அவரின் சொந்த ஊருக்கே சென்று விசாரிக்க ஒரு அதிகாரியை அனுப்பி வைக்க உள்ளோம். சாட்சிகள் மூவருமே தங்களது உயிருக்கு, ஆந்திர போலீசாரால் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று பயப்படுகின்றனர். எனவே, மூவருக்கும், உரிய பாதுகாப்பு அளிக்க தமிழக போலீஸ் டிஜிபிக்கு உத்தரவி்ட்டுள்ளோம். சாட்சியங்கள் டெல்லிக்கு வருவதற்கு, உள்ளூர் பஞ்சாயத்து தலைவர்கள் உதவி செய்துள்ளனர். எனவே, அவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க தமிழ்நாடு காவல்துறையை கேட்டுக் கொண்டுள்ளோம். இந்த சம்பவம் குறித்து ஜுடிசியல் மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளோம். மேலும், என்கவுண்டரில் ஈடுபட்ட போலீசார், வனத்துறையினரின் பெயர் பட்டியலை தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு அளிக்க வேண்டும் என்று ஆந்திர அரசுக்கு உத்தரவிட்டுள்ளோம். பெயர் பட்டியலில் எந்த விதமாற்றமோ, திருத்தமோ செய்ய கூடாது என்பதை ஆந்திராவுக்கு வலியுறுத்தியுள்ளோம். ஏப்ரல் 22ம்தேதிக்குள், ஆந்திர அரசு தனது பதில் மனுவை எங்களிடம் தாக்கல் செய்ய வேண்டும். அவர்களின் பதிலை பார்த்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆயினும், மேலோட்டமாக பார்க்கும்போது, இந்த 20 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அப்பட்டமாக மனித உரிமைகள் மீறல் நடந்துள்ளது தெரிகிறது. ஆந்திராவின் அறிக்கையை பரிசீலித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நீதிபதி முருகேசன் கூறினார். தேசிய மனித உரிமை ஆணையத்தின் அதிரடி நடவடிக்கைகளால் ஆந்திர அரசு விழிபிதுங்கியுள்ளது.

« PREV
NEXT »

No comments