Latest News

April 21, 2015

மீண்டும் போஸ்ட்மார்டம் செய்யப்பட்ட 6 தமிழர் உடல்கள் நள்ளிரவில் அடக்கம்
by admin - 0

ஆந்திர என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதில், மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்ட 6 பேர் உடல்கள் நள்ளிரவில் அடக்கம் செய்யப்பட்டது. திருப்பதி வனப்பகுதியில் கடந்த 6-ந்தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் தமிழகத்தை சேர்ந்த 20 தொழிலாளர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். 


இது தற்காப்புக்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு என ஆந்திர போலீசார் தெரிவித்தாலும், இது இவர்களில் 12 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இதில் கண்ணமங்கலம் வேட்டகிரி பாளையத்தை சேர்ந்த சசிக்குமார், பெருமாள் முருகன், முருகாப்பாடியை சேர்ந்த முனுசாமி, மூர்த்தி, காந்திநகரை சேர்ந்த மகேந்திரன் ஆகிய 6 பேரின் உடல்களையும் மறுபரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் ஆந்திர ஹைகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். 

அதனைத் தொடர்ந்து கோர்ட் உத்தரவுப்படி நேற்று 6 பேரின் உடலும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஹைதராபாத் உஸ்மானியா மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் சசியுதின்கான், அபிஜித்சுபேதார், ரமணமூர்த்தி ஆகியோர் 6 பேரின் உடல்களையும் மறுபிரேத பரிசோதனை செய்தனர். 

ஏற்கனவே திருப்பதி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த 9 மருத்துவர்களும் வந்திருந்த போதும், அவர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் தனி அறையில் இருந்தனர். 

பிற்பகல் 2.15 மணிக்கு தொடங்கிய மறுபிரேத பரிசோதனை இரவு 7.15 மணிக்கு முடிவடைந்தது. ஒவ்வொரு உடலாக மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 



மொத்தம் 5 மணி நேரம் இந்த பிரேத பரிசோதனை நடந்தது. இரவில் 7.15 மணிக்கு மறுபிரேத பரிசோதனை முடிந்தது. பரிசோதனை நடக்கும் போது வீடியோ கிராபர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டார். வீடியோ பதிவு முடிந்தவுடன் சிப்புகளை அங்கேயே டாக்டர்கள் வாங்கி மருத்துவ பரிசோதனை ரிப்போர்ட்டுகளை எழுதி தனித்தனி கவர்களில் சீல் வைத்தனர். 6 பேர் உடல்கள் பரிசோதனைகளிலும் இதே முறைகளை பின்பற்றினர். மறு பரிசோதனை முடிந்ததும் திருப்பதியில் இருந்து வந்திருந்த 9 டாக்டர்களும் முதலில் காரில் புறப்பட்டு சென்றுவிட்டனர். ஆனால் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இருந்து வந்திருந்த 3 டாக்டர்களும் 7.45 மணிக்குதான் பிரேத பரிசோதனை அறையில் இருந்து வெளியே வந்தனர். உடனே அவர்களும் காரில் புறப்பட்டு சென்றனர். செய்தியாளர்களைச் சந்திக்க அவர்கள் மறுத்து விட்டனர். இரவு 8.30 மணிக்கு 6 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவை 6 ஆம்புலன்ஸ்களில் ஏற்றப்பட்டு சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் 6 பேரின் உடலுக்கும் சொந்த ஊரில் வைத்து உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து படவேடு கமண்டல நதிக்கரை சுடுகாட்டில் முருகன், சசிக்குமார் உடல்களும் வேட்டகிரி பாளையம் சுடுகாட்டில் பெருமாள் உடலும், முருகாபாடியில் மூர்த்தி, முனுசாமி உடலும் காந்திநகர் புதூர் சுடுகாட்டில் மகேந்திரன் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. நள்ளிரவு 12 மணி வரை இறுதி சடங்கு வேலைகள் நடந்தது. 6 பேர் உடல்களையும் அடக்கம் செய்த பின்னர் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.




« PREV
NEXT »

No comments