Latest News

April 29, 2015

தமிழனை 360 டிகிரியிலும் தாக்குவதா?: வைகோ, வேல்முருகன், திருமா குமுறல்
by admin - 0

தமிழனை 360 டிகிரியிலும் தாக்குவதா?: வைகோ, வேல்முருகன், திருமா குமுறல்
காக்கை, குருவியை கூட சுட்டுக்கொல்ல முடியாத நிலையில், தமிழன் சுட்டுக்கொல்லப்படுகிறான். தமிழன் என்ன அவ்வளவு இழிவானவனா? ஒரு சேர எழுவோம்! ஒன்று சேர்ந்து போராடுவோம்! என்று வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூர் வனப்பகுதியில் கடந்த 7ஆம் தேதி 20 தமிழர்கள், ஆந்திர போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று பல்வேறு தமிழ் கட்சியினரும், அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில், ‘தமிழர் நீதி பேரணி' என்ற பெயரில் ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணை மற்றும் நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கவர்னரிடம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி, நேற்று மாலை தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் குவிந்தனர்.

வைகோ குமுறல் 

பேரணியில் பேசிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட ஏப்ரல் 7ஆம் தேதி ஒரு கருப்பு நாள். 20 தமிழர்களை சுட்டுக்கொலை செய்த காவல்துறை அதிகாரிகள் யார்? வனத்துறை அதிகாரிகள் யார் என்பது குறித்து ஆந்திர அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் நீதி விசாரணை வேண்டும். மேலும், சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய டி.ஐ.ஜி. காந்தாராவ் உள்பட அனைத்து அதிகாரிகளும் தண்டிக்கப்பட்ட வேண்டும்.


தமிழன் இழிவானவனா? 

இதற்கு காரணமான ஆந்திர அரசு தூக்கி எறியப்பட வேண்டும். தமிழக கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்றாலும், மோடி அரசுக்கு எங்களின் மனக்கொதிப்பை பதிவு செய்யவே இந்த பேரணி நடத்தப்படுகிறது என்றார். காக்கை, குருவியை கூட சுட்டுக்கொல்ல முடியாத நிலையில், தமிழன் சுட்டுக்கொல்லப்படுகிறான். தமிழன் என்ன அவ்வளவு இழிவானவனா? ஒரு சேர எழுவோம்! ஒன்று சேர்ந்து போராடுவோம்! இனி ஒரு தமிழன் கூட எங்கும் தாக்கப்படக்கூடாது. தமிழர்களின் மனக்குமுறலை மோடி அறியும் வண்ணம் இந்த பேரணியை பதிவு செய்வோம் என்றார் வைகோ.

360 டிகிரி தாக்குதல் 

தமிழனை நோக்கி 360 டிகிரி கோணத்திலும் தாக்குகின்றனர். இலங்கையில் தமிழன் இனப்படுகொலை செய்யப்படுகிறான். கேரளாவில் முல்லை பெரியாறு பிரச்சினை, கர்நாடகாவில் மேகதாது அணைகட்டும் பிரச்சினை, ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக்கொலை என எங்கு பார்த்தாலும் தமிழன் தாக்கப்படுகிறான்.


சித்ரவதை செய்து படுகொலை 

பாகிஸ்தான் மற்றும் இலங்கை இனப்படுகொலையாளன் கூட இது போன்ற கொடுமைகள் செய்திருக்கமாட்டான். ஆனால், நமது அண்டை மாநிலமான ஆந்திர அரசு 20 தமிழர்களை கட்டி தொங்கவிட்டு, நெருப்பு வைத்து எரித்து, கை, கால்களை வெட்டி சித்ரவதை செய்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.


மோடியின் கருத்து எங்கே 

இதுவரை ஆந்திர முதல்வர் ஒரு இரங்கலோ? வருத்தமோ? தெரிவிக்கவில்லை. எது, எதற்கோ டுவிட்டரில் கருத்து பதிவு செய்யும் பிரதமர் மோடி இது குறித்து ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. விஜயகாந்த் தலைமையில் பிரதமரை சந்தித்தது கூட திருப்தி அளிக்கவில்லை. அவர் இரு மாநில அரசிடமும் பேசி தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறினார். எனவே, மீண்டும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைத்தால், நாங்கள் அனைவரும் வருவோம். சாதி, மத வேறுபாடுகளை கடந்து, அரசியல் மாட்சியங்களை மறந்து, கூட்டணியை மறந்து, ஒட்டுமொத்த தமிழனுக்காக போராடுவோம் என்றார் திருமாவளவன்.

கோரிக்கை மனு 

பின்னர் வைகோ, தி.வேல்முருகன், தொல்.திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் ஆளுநர் மாளிகைக்கு சென்று கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் ஆந்திரா வனப்பகுதியில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு நீதிவிசாரணை நடத்த வேண்டும். ஆந்திரா சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். கொல்லப்பட்ட தமிழர்களுக்கு ஆந்திரா அரசு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். தமிழக அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



« PREV
NEXT »

No comments