Latest News

April 15, 2015

மன்மோகன் சிங்கை ஆ.ராசா தவறாக வழி நடத்தினார்!
by Unknown - 0



2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கின் இறுதி வாதங்கள் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று முதல் தொடங்கியுள்ளன. இன்றைய இறுதி வாதத்தின் போது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா தவறாக வழிநடத்தினார் என சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் குற்றம்சாட்டினார்.

2011-இல் சிபிஐ தொடர்ந்த 2ஜி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, மத்திய முன்னாள் தொலைத் தொடர்புத் துறைச் செயலர் சித்தார்த் பெஹுரா, ராசா அமைச்சராக இருந்த போது அவரது தனிச் செயலராகப் பணியாற்றிய ஆர்.கே. சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர்கள் ஷாஹித் உஸ்மான் பால்வா, டி.பி.ரியாலிட்டி நிறுவனர் வினோத் கோயங்கா, யூனிடெக் வயர்லெஸ்-தமிழ்நாடு நிறுவன மேலாண் இயக்குநர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் ஏடிஏஜி நிறுவன இயக்குநர்கள் கௌதம் தோஷி, சுரேந்தர் பிப்பாரா, ஹரி நாயர், மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, குசேகான் ஃபுரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் நிறுவன இயக்குநர்கள் ஆசிஃப் பால்வா, ராஜீவ் அகர்வால், கலைஞர் டிவி முன்னாள் இயக்குநர் சரத் குமார், பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானி ஆகிய 14 பேர் மீதும், ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ்-தமிழ்நாடு ஆகிய மூன்று நிறுவனங்கள் மீதும் சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர், சிபிஐ தரப்பினர் ஆகியோரின் வாதங்களும், அதைத் தொடர்ந்து இரு தரப்பினரின் சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டன. மேலும், அரசுத் தரப்பில் கூடுதல் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்ட மூவரின் வாக்குமூலமும், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கூடுதல் வாக்குமூலமும் பெறப்பட்டன. 

இதையடுத்து இவ்வழக்கின் இறுதி வாதங்கள் ஏப்ரல் 15 முதல் தொடங்கும் என்று நீதிபதி ஓ.பி.சைனி கடந்த மார்ச் 24-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். இதன்படி இறுதி வாதங்கள் முடிவடைந்ததும், 2011-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்புடைய சிபிஐ வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

182 பேரின் சாட்சியங்கள் பதிவு: 

இந்த வழக்கில் 2011, அக்டோபர் 22-ஆம் தேதி மேற்கண்ட 14 பேர் மீதும், மூன்று நிறுவனங்கள் மீதூம் சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, 2011, நவம்பர் 11-ஆம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. சிபிஐ சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்த ரிலையன்ஸ் ஏடிஏஜி நிறுவனத் தலைவர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்பட 153 பேரிடமும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 29 பேரிடமும் இதுவரை சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், கடந்த மூன்றாண்டு காலத்தில் பல்வேறு கோரிக்கைகளுடன் சிபிஐ, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சுமார் 1,150 மனுக்களை சிபிஐ நீதிமன்றம் விசாரித்துள்ளது. கடந்த 2012 பிப்ரவரி 2-ல் சிபிஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக 122 உரிமங்கள் வழங்கப்பட்டதில் அரசுக்கு ரூ.30,984 கோடி இழப்பு ஏற்பட்டி ருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 

இந்த வழக்கின் இறுதி வாதங்கள் இன்று முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மன்மோகன்சிங்கை தவறாக வழிநடத்திய ராசா இந்நிலையில் இன்று காலை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கூடியது. இன்றைய விசாரணைக்கு ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் ஆஜராகியிருந்தனர். அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான ஆனந்த் குரோவர் தமது தரப்பு இறுதி வாதத்தை முன்வைத்தார். 

அவர் முன்வைத்த வாதம்: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக கொள்கை முடிவுகளில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, அப்போதைய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா தவறாக வழிநடத்தியதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. 

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக கொள்கை முடிவுகளில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, அப்போதைய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா தவறாக வழிநடத்தினார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தனியார் நிறுவனங்கள் ஆதாயம் பெற வேண்டும் என்பதற்காகவே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான காலக்கெடுவை ஆ.ராசா குறைத்தார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஸ்வான் டெலிகாம், யுனிடெக் ஒயர்லெஸ் (தமிழ்நாடு) நிறுவனங்கள் ஆதாயமடைந்தன. இவ்வாறு ஆனந்த் குரோவர் வாதிட்டார். இதனைத் தொடர்ந்து தங்களது வாதங்களை முன்வைக்க இருதரப்பிலும் கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து மே 25-ந் தேதிக்கு வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நீதிபதி சைனி ஒத்திவைத்தார்.


« PREV
NEXT »

No comments