Latest News

March 21, 2015

உலகக்கிண்ணத்தை அதிர வைக்கும் அரையிறுதிச்சுற்று...
by Unknown - 0


அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் பரபரப்பாக நடந்து வரும் உலகக்கிண்ணத் தொடர் அரையிறுதி என்னும் முக்கிய கட்டத்தை நெருங்கியுள்ளது.

கடந்த மாதம் 14ம் திகதி தொடங்கிய இந்த தொடரில் பங்கேற்ற 14 நாடுகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும்.

இந்த ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.

அதன் படி ‘ஏ’ பிரிவில் இருந்து நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய 4 அணிகளும், `பி’ பிரிவில் நடப்பு சம்பியன் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் ஆகிய 4 அணிகளும் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

கடந்த 18ம் திகதி தொடங்கிய முதல் காலிறுதிப் போட்டியில், லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்தி வந்த இலங்கை அணியை தென் ஆப்பிரிக்கா விரட்டியடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது.

2வது காலிறுதிப் போட்டியில் கத்துக்குட்டி அணியான வங்கதேசத்தை புரட்டியெடுத்த இந்தியா அரையிறுக்குள் நுழைந்தது. 3வது காலிறுதியில் அவுஸ்திரேலியாவை பாகிஸ்தான் அச்சுறுத்திய போதும் அந்த அணி தொடரை விட்டு வெளியேறியது.

கடைசி காலிறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகளை துவைத்து எடுத்த நியூசிலாந்து இமாலய வெற்றியின் மூலம் அரையிறுதிக்குள் நுழைந்தது.

இந்நிலையில் அதிர வைக்கும் அரையிறுதிச் சுற்றில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா என பலமான அணிகள் உள்ளன.

வருகின்ற 24ம் திகதி நியூசிலாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் நடக்கும் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்காவும், 26ம் திகதி அவுஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடக்கும் 2வது அரையிறுதியில் இந்தியா- அவுஸ்திரேலியாவும் மோதுகின்றன.

பலம் வாய்ந்த இந்த அணிகளின் மோதல்கள் அனல் பறக்கும் ஆட்டமாக இருக்கும். இதில் வெற்றி பெறும் அணிகள் 29ம் திகதி மெல்போர்னில் நடக்கும் இறுதிப் போட்டியில் மோதும்.
« PREV
NEXT »