Latest News

March 21, 2015

1100 ஏக்கர் காணியை விடுவிப்பதாகக் கூறிய அரசு 300 ஏக்கரைக் கூட விடுவிக்கவில்லை
by Unknown - 0


இலங்கையின் புதிய ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கும்  சர்வதேச நாடுகளுக்கும் உயர் பாதுகாப்பு வலயத்தில்  1100 ஏக்கர்  நிலத்தை விடுவிப்பதாகக் கூறினர். ஆனால், அவர்கள் கூறிய  1100 ஏக்கர் நிலத்தில் இன்றளவும்  300 ஏக்கர்  நிலத்தைக் கூட முழுமையாக விடுவிக்க முடியவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.   

வலி.வடக்கு ஒட்டகப்புலம் மீள்குடியேற்ற முன்னாயத்த நிகழ்வில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் இன்றைய தினம் காலையில் மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளுடன் இந்த படைமுகாம் வேலிக்குள் வந்திருந்ததை நான் பார்த்தேன். ஆனால்,  வந்ததன் பின்னர் மக்கள் பலத்த ஏமாற்றத்துடனும் வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத மனவேதனையுடனும் நிற்பதையும் பார்க்கிறேன்.  

உண்மையில் இன்றைய தினம்  197 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படுவதற்காக மக்கள் தங்கள் நிலங்களை அடையாளப்படுத்தவுள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில்  பெருமளவு மக்கள் கடந்த 25 வருடங்களுக்குப் பின்னர் தங்கள் சொந்த மண்ணை, சொந்த வீட்டைப்  பார்வையிடுவதற்காக வந்திருந்தார்கள். ஆனால்,  அவ்வாறு  எதிர்பார்த்து வந்த மக்களில்  90 வீதமானவர்ளுடைய குடியிருப்புக் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் விடுவிக்கப்படும் எனக் கூறப்பட்ட பகுதிகளையும் சேர்த்து படையினர் மிக நீண்ட கம்பி  வேலிகளை அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந் நிலையில் அந்த  90 வீதமான மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கின்றார்கள்.   

தற்போது மக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்ட காணிகள் தோட்டக் காணிகளாகவும் தோலகட்டிக் காணிகளாகவுமே காணப்படுகின்றன. இந் நிலையில் மக்களுடைய குடியிருப்புக் காணிகள், பாடசாலைக் கட்டிடம், தேவாலயங்கள்  மற்றும்  பல பொதுக் கட்டிடங்கள் தொடர்ந்தும் படையினரின் முட்கம்பி வேலிகளுக்குள் உள்ளன.   

இலங்கையின் ஆட்சி மாற்றத்தின் பின்னர் வந்த புதிய அரசாங்கம் தமிழர்களுக்கும் சர்வதேசத்திற்கும் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள 1100 ஏக்கர் நிலத்தை நாங்கள் விடுவிப்போம் எனக் கூறியது. ஆனால்  அந்த 1100 ஏக்கர் நிலத்தில்  300 ஏக்கர் நிலத்தைக் கூட முழுமையாக விடுவிக்கவில்லை.   கொழும்பில் உள்ள ஜனாதிபதிக்கோ , பிரதமருக்கோ, அமைச்சர்களுக்கோ இங்குள்ள எங்கள் மக்களுடைய  நிலை தெரியப் போவதில்லை. 

எனவே, இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களையும் வட மாகாண சபையினரையும் அணுகி இங்கே இருக்கின்ற உண்மையான நிலை என்ன? என்பதை அரசாங்கம் தெரிந்து கொண்டு அதனடிப்படையில் இங்கு வந்து நிலைமைகளைப் பார்த்தறிய வேண்டும். அதுவரையில் இவ்வாறு மக்களை ஏமாளிகளாக்கும் மீள்குடியேற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கப் போகின்றன என்றார்.
« PREV
NEXT »