தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள வெலேசுதா தொடர்பான தகவல்களை வெ ளியிட்டால் எம்.பி. க்கள் உட்பட பலம் பொருந்திய நபர்களின் பெயர்களையும் வெளியிட வேண்டியிருக்கும். எனவே விசாரணைகள் முடியும் வரை அதனை நான் வெளியிடவில்லையென பொதுமக்கள் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க நேற்று வெள்ளிக்கிழமை சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. சாந்த பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ஜோன் அமரதுங்க இவ்விடயத்தை குறிப்பிட்டார்.
வெலேசுதா தொடர்பான பைல்கள் (ஆவணக்கோவைகள் ) காணாமல் போய்விட்டதாக தகவல் வெளிவந்திருப்பதாக குறிப்பிட்டு சாந்த பண்டார எம்.பி. இதன்போது கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜோன் அமரதுங்க,
பைல்கள் தொடர்பாக மட்டுமல்ல இன்னும் வேறு தகவல்கள் இருக்கின்றன. இவற்றை கூறுவதென்றால் இங்குள்ள சில உறுப்பினர்கள் பற்றிய தகவல்களையும் வெளியிட வேண்டியிருக்கும். எனினும் எம்.பி.க்களின் பெயர்களை குறிப்பிட முடியாது என்பதால் நான் இந்த தகவல்களை வெளியிடப்போவதில்லை.
வெலேசுதாவிடம் எம்.பி. ஒருவர் 12 இலட்சம் கடனுக்கு வாங்கியுள்ளார். எம்பி ஒருவர் எதற்காக பணம் வாங்கினார் என்று தெரியவில்லை என்று கூறினார்.
இதேவேளை இப்படியான விடயங்களை தெரிவித்துக்கொண்டிருக்காது, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் நிமால் சிறிபால டி சில்வா கூறினார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் போன்று எடுத்த எடுப்பில் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்காமல் உரிய விதத்தில் விசாரணைகளை மேற்கொண்டு போதிய சாட்சியங்களுடன் கைது செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் ஜோன் அமரதுங்க கூறினார்.
அத்துடன் விசாரணையின் இறுதியில் பலம் பொருந்திய நபர்களையும் கைது செய்ய வேண்டியிருக்கும் என்பதனை கவலையுடன் தெரிவிக்க வேண்டியிருப்பதாகவும் ஜோன் அமரதுங்க கூறினார்.
இதேவேளை அண்மைக்காலங்களில் பல்வேறு இடங்களிலும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டவர்களது சடலங்கள் மீட்கப்பட்டிருப்பது தொடர்பாக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றி சாந்த பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜோன் அமரதுங்க, இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. இவை இடம்பெற்றிருக்கக்கூடிய விதம் பற்றி ஆராயப்படுகின்றன.
இச்சம்பவங்கள் தொடர்பாக விரிவான அறிக்கைகளையும் நான் பொலிஸ் மா அதிபரிடம் கோரியிருக்கின்றேன். அடுத்த வாரத்தினுள் அது கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
Social Buttons