Latest News

March 02, 2015

இலங்கையின் ஏமாற்று வேலைகளுக்கு இந்தியா பலியாக கூடாது - திருமாவளவன்
by Unknown - 0

இராணுவ வெளியேற்றம், மீள்குடியேற்றம்,நிலவிடுவிப்பு, இரகசியச் சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகளின் விடுதலை , தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை அளிக்கவும் ஐ.நா.விடம் இந்தியா வலியுறுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைப் பேரவையின்  28ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகின்றது. இந்தநிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,    இலங்கையில் புதிய ஜனாதிபதி பதவியேற்று இத்தனை நாட்கள் ஆகியும் தமிழர் பகுதிகளிலிருந்து இராணுவத்தை வெளியேற்றவோ,  அபகரிக்கப்பட்ட தமிழர்களின் நிலங்களைத் திருப்பிக்கொடுக்கவோ நடவடிக்கையையும் எடுக்கவில்லை.  

அதுபோல போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் எந்தவித விசாரணையும் இல்லாமல் இரகசியச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை விடுவிப்பது தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் வாய் திறக்கவில்லை.    போர்க்குற்ற அறிக்கை சமர்ப்பிப்பதை அடுத்த கூட்டத்துக்கு ஒத்தி வையுங்கள் எனக் கேட்ட  அரசாங்கம் இப்போது செப்ரெம்பரில் நடைபெறவுள்ள கூட்டத்திலும் அறிக்கையை சமர்ப்பிக்கவிடாமல் முட்டுக்கட்டை போடும்வகையில் பேசிவருகிறது. 

எனினும் அடுத்த தேர்தல் நடத்தப்பட்டு சிறிசேனாவின் கையில் அதிகாரம் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டால் அதன் பின்னர் அவரும் ராஜபக்ச போலத்தான் நடந்துகொள்வார் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மேலும் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைதுசெய்யப்படுகிறார்கள், இலங்கையின் சீன ஆதரவு நிலையிலும் பெரிதாக மாற்றம் இல்லை.

இந்தியா பலமுறை வலியுறுத்தியும்கூட தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்து இலங்கை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இலங்கையின் ஏமாற்று வேலைகளுக்கு இந்தியா பலியாகி விடாமல் இந்த ஐ.நா. மனித உரிமைக் ஆணைக்குழு கூட்டத்தில் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.

வடமாகாண சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானத்தின் அடிப்படையில் ஐ.நா. விசாரணையை விரிவுபடுத்த இந்தியா குரலெழுப்ப வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
« PREV
NEXT »