Latest News

March 04, 2015

அனைத்துலகத்தினை தவறாக திசைதிருப்பும் முனைப்பில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு - TGTE அமைச்சர் சுதன்ராஜ்
by Unknown - 0

அனைத்துலக அரங்கில் வெளிப்படைத்தன்மை பற்றிப்பேசும் இலங்கை, ஐ.நா விசாரணையாளர்களை நாட்டிற்குள் உள்நுழைய மறுப்பது ஏன் என கேள்வியெழுப்பியுள்ள தமிழர் தரப்பு, அனைத்துலகத்தினை தவறாக திசைதிருப்பும் முனைப்பில்  இலங்கை ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

தொடங்கியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில்  இலங்கையின் வெளிவிவகாரதுறை அமைச்சர் மங்கள சமரவீரவின் உரை தொடர்பில் கருத்துரைக்கும் பொழுதே ஜெனீவாவில் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தமிழின அழிப்பின் தனது இரத்தம் தோய்ந்த கரங்களை மறைத்தவாறு புதிய ஆட்சி புதிய அரசாங்கம் என்ற ஒப்பனையுடன் அனைத்துலகத்தினை மீண்டுமொருதடவை ஏமாற்ற இலங்கை முனைந்துள்ளது.

இலங்கை தொடர்பிலான ஐ.நா விசாரணை அறிக்கை ஒத்தி வைத்தமைக்கு ஐ.நா ஆணையாளர் முன்வைத்திருந்த காரணமும், இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் வியாக்கியானமும் முரண்பட்டதாக உள்ளது. இது  இலங்கை தொடர்பில் அனைத்துலகத்தினை தவறான திசைக்கு இட்டுச் செல்கின்ற முனைப்பு.

முக்கியமாக விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் உள்நாட்டு விசாரணை மற்றும் நீதிக்கட்டமைப்பு பொறிமுறை உருவாக்கப்படும் என்பது அனைத்துலக விசாரணையினை இல்லாதொழிக்கின்ற தந்திரோபாயமாகும்.

இவ்வாறான இலங்கையின் தந்திரோபாய வியூகங்களை முறியடிக்கும் வகையில் தமிழினப் படுகொலையாளிகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் பொருட்டு ஒரு மில்லியன் ஒப்பங்களைப் பெறும் கையெழுத்துப் போராட்டம் ஒன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்குகின்றது என அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »