Latest News

March 30, 2015

கட்சித் தலைவர்களுக்கு தேர்தல்கள் ஆணையாளர் இன்று விளக்கம்!
by Unknown - 0


250 எம்.பிக்கள்

விகிதாசாரத்தில்; 140
தொகுதிவாரியாக 80 
தேசிய பட்டியலில் 30

விருப்புவாக்குமுறை மற்றும் தொகுதிவாரி முறையை உள்ளடக்கிய புதிய தேர்தல் முறை தொடர்பாக கட்சித் தலைவர்களுக்கு தேர்தல்கள் ஆணையாளர் விளக்கமளிக்கவுள்ளார். இன்று அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற விருக்கும் இக்கூட்டத்தில் தேர்தல்கள் ஆணையாளர் உத்தேச தேர்தல் முறை தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளார்.

தற்பொழுது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையை மாற்றி புதிய தேர்தல் முறையொன்றைக் கொண்டுவருவது தொடர்பாக கட்சிகளுக்கிடையில் பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. இது தொடர்பாக கட்சித் தலைவர்களுக்கும், தேர்தல் ஆணையாளருக்குமிடையில் அண்மையில் பேச்சுவார்த்தையொன்றும் நடைபெற்றிருந்தது.

உத்தேச புதிய தேர்தல் முறைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்களின எண்ணிக்கை 250 ஆக அதிகரிக்கப்படவிருப்பதாகவும், இதில் 140 பேர் விருப்புவாக்குகளின் படியும், 80 பேர் தொகுதிவாரிமுறையின் கீழ் மாவட்ட அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவிருப்பதுடன், 30 தேசிய பட்டியல் ஆசனங்களும் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பாக கட்சிகளுக்கிடையில் எந்தவிதமான உறுதியான இணக் கப்பாடுகளும் எட்டப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறான நிலையில் புதிய தேர்தல் முறை குறித்து இன்றையதினம் தேர்தல்கள் ஆணையாளர், கட்சிகளின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார்.

புதிய தேர்தல் முறை தொடர்பாக கட்சிகளுக்கிடையில் பொது இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும், சிறுபான்மை இனத்தவருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய தேர்தல் முறை அமையவேண்டும் என்ற விடயத்தை தேர்தல்கள் ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருப்பதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படாத வகையில் புதிய தேர்தல் திருத்தம் அமைய வேண்டும் என்பதில் நாம் கூடுதல் அக்கறை செலுத்தியுள்ளோம். இது குறித்து நாம் ஏற்கனவே தேர்தல்கள் ஆணையாளருக்கு பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம். எமது கட்சி சார்பிலும் பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளோம். இன்றையதினம் நடைபெறும் கூட்டத்தில் சிறுபான்மை மக்களின் விடயம் தொடர்பிலும் தேர்தல்கள் ஆணையாளர் விளக்கமளிப்பார் என எதிர்பார்ப்பதாக மனோ கணேசன் குறிப்பிட்டார்.

அதேநேரம், புதிய தேர்தல் மறுசீரமைப்புத் தொடர்பில் கட்சிகளுக்கிடையில் இதுவரை எந்தவிதமான இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லையெனக் குறிப்பிட்ட ஜே.வி.பியின் ஊடகச் செயலாளர் விஜித ஹேரத், கட்சித் தலைவர்களுக்கும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்தே இன்றையதினம் விளக்கமளிக்கப் படவுள்ளது.

புதிய தேர்தல் முறை குறித்து கட்சிகளுக்கிடையில் எதுவித இணக்கப்பாடும் ஏற்பட்டிருக்காத நிலையில் தேர்தல்கள் ஆணையாளருக்கும், கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான அடுத்த கட்ட சந்திப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி நடைபெறவிருப்பதாகவும் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இது இவ்விதமிருக்க இன்றையதினம் தேர்தல்கள் ஆணையாளரால் முன்வைக்கப்படும் புதிய தேர்தல் முறை குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்றக் குழுவும் இன்றையதினம் கூடி ஆராயவுள்ளது. புதிய தேர்தல் முறை பற்றி இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
« PREV
NEXT »