Latest News

March 28, 2015

யாராலுமே தன்னை மறக்க முடியாதபடி ஒரு காரியத்தை செய்வேன்- ஜெர்மன் விமானி
by Unknown - 0

அல்ப்ஸ் மலையில் கடந்த செவ்வாயன்று ஜெர்மன்விங்ஸ் விமானம் ஒன்றை 150 பேருடன் வேண்டுமென்றே மோதி அனைவரும் உயிரிழக்க காரணமாக இருந்தவராக சந்தேகிக்கப்படும் ஜெர்மன் விமானி ஆந்த்ரேயாஸ் லுபிட்ஸ், எல்லோரும் தன்னை நினைவில் கொள்ளும்படியான ஒரு காரியத்தை தான் செய்வேன் என்று முன்பே கூறியதாக அவரின் முன்னாள் காதலி ஒருவர் கூறியுள்ளார்.

ஆந்த்ரேயாஸ் லுபிட்ஸ் மனநலப் பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் என்றும், அவருக்கு அவ்வப்போது கோபமும் மன அழுத்தமும் வந்து ஆக்ரோஷமாக நடந்துகொள்வார் என்றும் விமான சிப்பந்தியாக பணியாற்றும் ஆந்த்ரேயாஸின் முன்னாள் காதலி, 'பைல்ட்' என்ற ஜெர்மன் செய்தித்தாளுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஆந்த்ரேயாஸ் ஒரு வருடத்துக்கு முன்னர் கூறியிருந்த ஒரு விஷயத்தை மரியா டபிள்யூ என்று மட்டும் அச்செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டுள்ள அப்பெண் நினைவுகூர்ந்துள்ளார்.

சென்ற ஆண்டு ஒரு ஐந்து மாத காலம் ஆந்த்ரேயாஸ் லுபிட்ஸுடன் சேர்ந்து தான் வேலை செய்ததாக அந்த விமான சிப்பந்தி தெரிவித்துள்ளார்.

தனது மனநலப் பிரச்சினைகளை வெளியில் காட்டிக்கொள்ளாமல் மறைப்பதில், லுபிட்ஸ் கைதேர்ந்தவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இரவு உறங்கிக்கொண்டிருக்கும்போது, 'மோதப்போகிறோம்' என்று அலறிக்கொண்டு லுபிட்ஸ் சில நேரம் கண்விழித்தது உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லுபிட்ஸ் உளவியல் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார் என்றும், தனக்கு மனநலக் கோளாறு இருப்பதால் முதன்மை விமானியாக எப்போதுமே வர முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் அவருக்கு இருந்தது என்றும் மரியா டபிள்யூ தெரிவித்துள்ளார்.

லுபிட்ஸுக்கு ஏதோ மனநலப் பிரச்சினை இருந்தது அதிகமாகத் தெளிவாகியதால்தான் தாங்கள் பிரிந்துவிட்டதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

விழுந்து நொறுங்கிய விமானத்தின் பிளாக் பாக்ஸ் விமானியறை ஒலிப்பதிவுக் கருவியில் பதிவான சத்தங்களை ஆராய்ந்த பிரஞ்சு விசாரணையாளர்கள், விமானியறையிலிருந்து முதன்மை விமானி எழுந்து சென்ற நிலையில் இரண்டாம் விமானியான லுபிட்ஸ் விமானியறைக் கதவை தாழிட்டிருந்தார் என்று கூறியிருந்தனர்.

முதன்மை விமானி கதவைத் திறக்கச் சொல்லிக் கேட்டும் லுபிட்ஸ் பதிலளிக்கவே இல்லை என்றும், உயரப் பறந்த விமானம் தாழ வருவதற்கான பட்டன்களை லுபிட்ஸ் வேண்டுமென்றேதான் அழுத்தியிருந்தார் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

விமானம் மலையில் மோதும்வரை அவர் உயிருடனும் உஷாருடனும் இருந்தார் என்றும் தாம் யூகிப்பதாகவும் அவர்கள் கூறினர்னர்.

பின்னர் லுபிட்ஸின் வீடுகளை பரிசோதனை செய்த ஜெர்மன் சட்ட நடவடிக்கை அதிகாரிகள், லுபிட்ஸ் மனநல சிகிச்சைகளை பெற்றுவதந்தற்கான ஆவணங்களைக் கண்டெடுத்ததிருந்தனர்.

மேலும் உடல்நிலை சரியில்லாததால் லுபிட்ஸ் வேலைக்கு வர இயலாது என தெரிவிக்கும் மருத்துவர் கடிதங்கள் அவர் வீட்டில் கிழிந்து கிடந்ததையும் அவர்கள் கண்டனர்.

இதன் எதிரொலியாக விமானியறையில் எல்லா நேரத்திலும் இரண்டு பேர் இருப்பதை கட்டாயமாக்கும் புதிய விதியைளை தாம் அறிமுகப்படுத்துவதாக ஜெர்மன் மற்றும் ஐரோப்பிய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

« PREV
NEXT »