Latest News

March 25, 2015

பசில் ராஜபக்ஷவை இலங்கைக்கு வரவழைக்க பொலிஸார் நடவடிக்கை!
by Unknown - 0


இலங்கையின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் அரச நிதி மோசடி தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக அவரை நாட்டுக்கு அழைப்பதற்கான உத்தரவொன்றை நீதிமன்றத்திடம் பெறவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

திவிநெகும திணைக்களத்தில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பெரும் நிதி மோசடிகள் தொடர்பில் 34 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அந்த முறைப்பாடுகள் தொடர்பில் அந்த திணைக்களத்தின் இயக்குநரிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை விசாரிப்பதற்கான தேவை எழுந்துள்ளதாகவும், அவர் தற்போது வெளிநாட்டில் வசித்துவருவதாகவும் ருவான் குணசேகர கூறினார்.

திவிநெகும திணைக்களத்தின் நிதிமோசடி தொடர்பில் பொலிஸார் கடுவலை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்துக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

இதன்படி, வெளிநாட்டில் வசித்துவரும் பசில் ராஜபக்ஷவை இலங்கைக்கு அழைப்பதற்கான உத்தரவொன்றை நீதிமன்றத்தின் ஊடாக பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

முதற்கட்டமாக, பசில் ராஜபக்ஷவை தொடர்புகொண்டு விசாரணைகளுக்கு சமுகமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகவும், அதற்கு அவர் ஒத்துழைப்பு அளிக்காவிட்டால் சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெற்று அவரை நாட்டுக்கு அழைத்துவருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 8-ம் திகதி நடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, பசில் ராஜபக்ஷ இலங்கையிலிருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »