Latest News

March 24, 2015

தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக வரமுடியாதா- இராதாகிருஸ்ணன்
by Unknown - 0


நாங்கள் இந்த நாட்டில் சிறுபான்மையினர் என்ற ரீதியில் ஜனாதிபதியாக வரமுடியாது அதேபோல பிரதமராகவும் வர முடியாது ஆனால் எதிர்கட்சி தலைவராகவும் வர முடியாதா? என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருகோணமலை கிண்ணியா மத்திய கல்லூரியின் நிர்வாக கட்டிடத்தை கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் இன்று காலை திறந்து வைத்தார்.

அமைச்சருடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட், உள்நாட்டு போக்குவரத்து பிரதி அமைச்சர் எம். எஸ்.தவுபிக், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி உட்பட கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அங்கு பேசிய கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்,

இன்று இலங்கையில் அரசியலில் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த மாற்றங்கள் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நடைபெறுகின்றது. எனவே இந்த நிலையில் ஏன் சிறுபான்மையை சார்ந்த ஒருவர் எதிர்கட்சி தலைவராக வர முடியாது? எமது பாராளுமன்றத்தில் தமிழர்கள் அதாவது மறைந்த தலைவர் அமிர்தலிங்கம் எதிர்கட்சி தலைவராக இருந்த வரலாறும் சரித்திரமும் எமக்கு உண்டு.

எனவே இன்று இந்த நிலையில் நாம் சிறுபான்மை இனங்கள் ஒன்று சேர்ந்தால் நிச்சயமாக எதிர்கட்சி தலைவராக ஒருவர் வரமுடியும் அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் மலையக மக்கள் முன்னணி அதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க தயாராகவுள்ளது. இதனை நாம் அரசியலாக பார்க்காமல் சமூக ரீதியில் சிந்தித்து எமது மத்தியில் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்பதற்காகவே நான் இதனை கூறுகின்றேன்.

ஆனால் இதனை வைத்துக் கொண்டு ஒரு சிலர் அரசியல் செய்ய முற்படுகின்றார்கள். அதற்கு சிறுபான்மை மக்களாகிய நாம் இடமளிக்க கூடாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »