Latest News

March 06, 2015

ஐநா அறிக்கை தொடர்பில் ஐயம் வேண்டாம் - நோர்வே
by Unknown - 0

இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது நடந்த சம்பவங்கள் பற்றிய உண்மைகளை ஏற்றுக் கொண்டால்தான் சமூகங்களிடையே நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் ஏற்படுத்த முடியும் என்று யாழ்ப்பாணத்திற்கு இன்று வெள்ளியன்று விஜயம் செய்த நார்வே தூதுவர் கிறீட்டே லோஷனிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, வடபகுதியின் அரசியல் மற்றும் மாகாணசபையின் நிலைமைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான நார்வே தூதுவர், முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் மாகாண விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன் ஆகியோரை தனித்தனியே சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஆட்சி மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள சாதகமான நிலைமைகள் நன்மையளிக்கின்றனவா என்று கேட்டறிந்துள்ள நார்வே தூதுவர், இத்தகைய சூழ்நிலையில் வடக்கு மாகாணசபையினால் இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது நிலைமையை பாதிக்கும் அல்லவா என்று முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்குப் பதிளித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், நடைபெற்ற சம்பவங்கள் பற்றிய உண்மைகளை ஏற்றுக்கொண்டால்தான், சமூகங்களிடையே நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் ஏற்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

'ஐயம் வேண்டாம்'

அவ்வாறே, ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டிருப்பதன் மூலம், தங்களின் பிரச்சினைகளும் உரிமைகளும் பிற்போடப்பட்டு மறக்கடிக்கச் செய்யப்பட்டு விடுமோ என்ற அச்சம் காரணமாகவே அதற்குத் தாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் முதலமைச்சர் நார்வே தூதுவரிடம் எடுத்துக் கூளியுள்ளார்.

எனினும், அத்தகைய அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லையென்றும், சர்வதேச நாடுகள் இலங்கை விவகாரம் தொடர்பில் தெளிவாக இருப்பதாலும் நார்வேயும் தமிழ் மக்களின் சார்பாக நியாயமாக நடந்து கொள்ளும் என்பதால் அத்தகைய அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் நார்வே தூதுவர் தம்மிடம் தெரிவித்ததாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நா அறிக்கை ஒரு தடவையே பின்போடப்பட்டிருப்பதாகவும், அதன்பின்னர் அந்த அறிக்கை ஐநா சபையில் சமர்ப்பிக்கப்படும் என்பதால் அது குறித்து ஐயப்பாடு கொள்ள வேண்டியதில்லை என்று நார்வே தூதுவர் தம்மிடம் தெளிவுபடுத்தியிருப்பதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சுன்னாகம் பிரதேசத்தில் நிலத்தடி நீர் மாசடைந்திருக்கும் நிலையில், அங்கு நிலத்தை ஊடுருவி ஆய்வு செய்வதற்கான ராடார் கருவியை வழங்குவது தொடர்பில் நார்வே தூதுவர் விவசாயத்துறை அமைச்சரைச் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தியிருக்கின்றார்.

நன்றி BBC Tamil
« PREV
NEXT »