Latest News

March 12, 2015

எழுத்தாளர்களுக்கான சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை-அமைச்சர்
by admin - 0

தற்போது நாட்டில் இடம்பெறுவது நல்லாட்சியா என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும் எழுத்தாளர்களுக்கான சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை என்றும் கலாசார இராஜாங்க அமைச்சர் நந்திமித்திர ஏக்கநாயக்க தெரிவித்தார்.


ஜனநாயகம் பாதுகாப்பதற்கான அனைத்து வேலைத்திட்டத்தையும் எழுத்தாளர்கள் முன்னெடுக்க வேண்டும். இந்த அரசாங்கத்தில் நாம் நல்லாட்சியை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனநாயகத்திற்காக எழுத்தாளர்கள் அமைப்பினால் நேற்று முன்தினம் கொழும்பு நூதனசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கொன்றிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அண்மையில் முன்னாள் அமைச்சரான பந்துல குணவர்த்தனவினால் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை உடனடியாக இடை நிறுத்துமாறு பாதுகாப்பு அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்தி ஒருவர் கடிதம் மூலம் தடை விதித்துள்ளார். 


இது நல்லாட்சிக்கு உரிய பண்பு அல்ல. நாம் புதியதொரு அரசியல் யுகத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே முன்னைய அரசிலிருந்து விலகினோம். 


எனினும் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து பாதி நாட்கள் கடந்து விட்டது. ஆனாலும் நாம் எதிர்பார்த்த சூழல் இன்னும் ஏற்படவில்லை.



1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் நிலவிய மோசமான ஆட்சியை கண்டித்தே ஐக்கிய தேசிய கட்சி அரசிலிருந்து வெளியேறி புதியதொரு ஆட்சியை ஏற்படுத்தினோம். இருப்பினும் எழுத்தாளர்களுக்கு சுதந்திரமாக செயற்படக்கூடிய சூழல் ஏற்படவில்லை. லசந்த விக்கிரமதுங்க போன்ற எழுத்தாளர்கள் கொல்லப்பட்டனர்.

மேற்படி மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியை கண்டித்தே புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதற்கான போராட்டத்தில் இறுதியாக வந்து இணைந்து கொண்டேன்.  

எழுத்தாளர்களுக்கான சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை. 

எனவே தற்போது நாட்டில் நிலவுகிறது நல்லாட்சியா என்பது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.



எனினும் எமக்கு இந்த ஆட்சியில் நம்பிக்கை உள்ளது. எனவே நீதியாகவும் நியாயமானதுமான ஆட்சியையே நாம் எதிர்பார்த்துள்ளோம்.


ஆகவே புதியதொரு அரசியல் கலா சாரத்தினூடாக எழுத்தாளர்களுக்கு ஏற்ற நாட்டை தோற்றுவிக்க வேண்டும் என்றார்.



« PREV
NEXT »

No comments