ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் ஆதரவைப் பெறுவதற்காக அமெரிக்க எம்.பி.க்களுக்கு முந்தைய மகிந்த ராஜபக்ச அரசு லஞ்சம் கொடுத்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று இலங்கையின் மைத்ரிபால அரசு அறிவித்துள்ளது.
இலங்கையில் இறுதிகட்ட போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானங்கள் கொண்டு வந்தது. 2012-ம் ஆண்டில் இருந்து மூன்று முறை இந்த தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
2014-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின்படி, இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் வந்தபோது, இலங்கைக்கு ஆதரவாக செயல்படுவதற்காக, அமெரிக்க எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்க முந்தைய ராஜபக்சே அரசு முயன்றதாக தெரிய வந்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனதா விமுக்தி பெரமுனா தலைவர் அனுரா குமாரா திஸ்சநாயகே இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். இப்படி லஞ்சம் கொடுப்பதற்காக, அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் மூலம் நிதி திரட்டப்பட்டதா? என்றும் அவர் கேட்டார்.
இதற்கு பதில் அளித்த வெளியுறவுத் துறை துணை அமைச்சர் அஜித் பெரேரா, எனது அமைச்சகத்தில் உள்ள ஆவணங்களின்படி, நிதி திரட்டப்பட்டது உண்மைதான். ஆனால், அமெரிக்க எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்தார்களா? அல்லது அவர்களே எடுத்துக்கொண்டார்களா என்று தெரியவில்லை எனக் கூறினார்.
அப்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே குறுக்கிட்டு, இதுபோன்று எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்க நிதி திரட்டுவது அமெரிக்க சட்டங்களை மீறிய செயல். எம்.பி.க்கள் பணம் வாங்கி இருந்தால், அந்த பணம் எதற்காக பெறப்பட்டது என்று அமெரிக்க சட்டப்படி அவர்கள் விளக்க வேண்டி இருக்கும் என்றார். மேலும் இக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துமாறு இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீராவை கேட்டுக்கொள்வேன் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறினார்.
Social Buttons