![]() |
ஜெ |
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா உட்பட 4 பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதி நாளை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு 4 ஆண்டு காலம் சிறைத் தண்டனையும் ரூ100 கோடி அபராதமும் விதித்தது பெங்களூரு தனிநீதிமன்றம். இத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்
இம்மனுவை விசாரிக்க கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி நியமிக்கப்பட்டார். அவர் முன்னிலையில் இம்மனு மீதான விசாரணை கடந்த ஜனவரி 5-ந் தேதி முதல் 41 நாட்கள் நடைபெற்றது. குற்றவாளிகள் தரப்பில் வழக்கறிஞர்கள் நாகேஸ்வரராவ், வசந்த், சுதந்திரம் ஆகியோரும் அரசு தரப்பில் பவானி சிங்கும் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதமும் முடிந்த நிலையில், இவ்வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அனுமதிகேட்டு சுப்பிரமணியசாமி மனு கொடுத்திருந்தார். அதை பரிசீலனை செய்த நீதிபதி குமாரசாமி, வாதம் செய்ய அனுமதிக்க முடியாது. வேண்டுமானால் உங்கள் தரப்பு வாதத்தை எழுத்து மூலமாக தாக்கல் செய்யலாம் என அனுமதி வழங்கி இருந்தார்.
அதன்படி நீதிமன்றத்தில் ஆஜரான சுப்பிரமணியசாமி தனது தரப்பு வாதத்தை எழுத்து மூலமாக நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்பு தாக்கல் செய்திருந்தார். அதன் பின்னர் நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார். இதனிடையே மேல்முறையீட்டு வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்கக் கோரி தி.மு.க.பொதுச்செயலர் அன்பழகன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. அப்போது அன்பழகனின் மனு ஏற்கப்பட்டு பவானிசிங் நீக்கப்பட்டால் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் புதிய அரசு வழக்கறிஞர் தமது வாதத்தைப் பதிவு செய்ய வேண்டியதிருக்கும்.
அதனால் ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணை மேலும் சில காலம் நீட்டிக்க வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில் அன்பழகனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டால் நாளையே மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்புக்கான தேதியை கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி அறிவிக்க வாய்ப்பிருக்கிறது என்றே கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Social Buttons