விமானப் பயணமா, அச்சம் வேண்டாம் என்று தொழில்நுட்ப நிபுணர்கள் உத்தரவாதம் தரும் யுகத்தில் வாழ்கிறோம்.
இன்று தொழில்நுட்ப ரீதியாக முன்னேறியிருக்கிறோம். எதுவித கோளாறுகளும் இல்லாமல் பாதுகாப்பாக பயணத்தைப் பூர்த்தி செய்யலாம் என்று விமானச் சேவை நிறுவனங்கள் உறுதியளிப்பதைக் காணலாம்.
உண்மை தான். எஞ்சின் பழுதடைந்ததால் விமானம் வீழ்ந்து நொருங்கியது என்பது போன்ற செய்திகள் கடந்த காலத்திற்குரியவை. எனினும், சமீபத்திய காலமாக வான்பரப்பில் நிகழும் சம்பவங்கள் விமானப் பயணம் பாதுகாப்பானதாக இல்லை என்ற உணர்வை ஏற்படுத்தி நிற்கின்றன.
Accident |
ஜேர்மன் விங்ஸ் விமானத்தின் இறுதி நிமிடங்கள்
புகழ்பெற்ற லுப்தான்ஸா நிறுவனத்தின் கிளை அமைப்பான ஜேர்மன்- விங்ஸ். அதற்கு சொந்தமான எயார்பஸ் ஏ-320 ரகத்தைச் சேர்ந்த விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 9.01 அளவில் ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் இருந்து புறப்படுகிறது. 150 பேருடன் ஜேர்மனியின் டுவெஸ்ஸல்டொர்வ் நகரை நோக்கிய பயணம். விமானம் அரை மணித்தியாலங்களில் 38,000 அடிகள் வரை உயர்கிறது. நேரம் சரியாக காலை 9.31. விமானிகளின் அறையில் (கொக்பிற்) இருந்து வழமை போல பயணத்தைத் தொடர கட்டுப்பாட்டு அறையின் அனுமதி கேட்கப்படுகிறது. ஒரு நிமிடம் கழிகிறது. விமானம் சடுதியாக கீழிறங்குகிறது. கழிவறைக்கு சென்ற தலைமை விமானி கொக்பிற்றை அடைய முனைகிறார். கதவு மூடியிருப்பதை அவதானிக்கிறார். கொக்பிற்றில் துணைவிமானி. தலைமை விமானி கதவைத் தட்டுகிறார். எதுவித பதிலும் இல்லை. பலமாக தட்டுகிறார். மறுபக்கத்தில் இருந்து மௌனம். கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானியின் அறையத் தொடர்பு கொள்கிறார்கள். அதற்கும் பதில் இல்லை. விமானம் தரையை நெருங்குகிறது. பயணிகள் வீரிட்டுக் கத்துகிறார்கள். எல்லாம் முடிகிறது. சரியாக 9.40 அளவில் விமானம் பிரான்ஸின் அல்ப்ஸ் மலைத்தொகுதியில் மோதி நொருங்குகிறது.
கடந்த வார விமான விபத்து பற்றி ஆராயும் நிபுணர்கள், துணை விமானியின் மீது விரல் நீட்டுகிறார்கள். இந்த மனிதர் வேண்டுமென்றே விமானத்தை நிர்மூலமாக்கியிருக்கிறார் என்பது நிபுணர்களின் கணிப்பு. விமானிகளின் அறையில் நிகழும் சம்பாஷணைகளைப் பதிவு செய்யக்கூடிய கறுப்புப் பெட்டி என்பது விபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதில் மிகவும் முக்கியமான கருவியாகும். அதில் பதிவு செய்யப்பட்ட சப்தங்களை ஆராய்கையில், துணை விமானியின் நோக்கம் தெளிவாகிறதென பிரான்ஸைச் சேர்ந்த விசாரணை உத்தியோகத்தர்கள் கூறுகிறார்கள்.
தலைமை விமானி இயற்கையின் தேவையை நிறைவேற்றுவதற்காக கொக்பிற்றில் இருந்து வெளியேறிய சில நிமிடங்களில், துணை விமானி விமானத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார். விமானத்தைக் கீழிறக்குவதற்கான பொத்தனை அழுத்தியிருக்கிறார்.
கொக்பிற் கதவு தட்டப்படும் சமயத்தில் துணை விமானி காத்த மௌனம், விமானத்தை நிர்மூலமாக்க வேண்டும் என்ற நோக்கத்தைத் தெளிவுபடுத்துவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
விசாரணையில் கண்டறியப்பட்ட விடயங்களைத் தொடர்ந்து, இரண்டு விடயங்கள் மீது கவனம் செலுத்தப்படுகிறது. முதலாவது விடயம், அன்ட்ரியஸ் லுபிட்ஸின் பின்புலம். விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொக்பிற் விதிமுறைகளை இறுக்கமாக்குதல் என்பது இரண்டாவது விடயம்.
ஒரு விமானியின் பணி உன்னதமானது. நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிர்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய பொறுப்பு விமானியைச் சார்ந்தது. இந்தப் பொறுப்பில் எதுவித சமரசங்களுக்கும் இடமிருக்க முடியாது.
ஒரு விமானியை முதற்தடவையாக கொக்பிற்றுக்குள் அனுமதிப்பதற்கு முன்னர், அவர் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் தகுதியானவரா என்பதைக் கண்டறிவதற்காக எத்தனையோ சோதனைகள் நடத்தப்படுவது வழக்கம்.
இத்தகைய சகல சோதனைகளையும் லுபிட்ஸ் தாண்டியிருக்கிறார் என்று லுப்தான்ஸா நிறுவனம் அறிவித்துள்ளது. அவர் 100 சதவீதம் தகுதியானவராகத் திகழ்ந்தார் என்று நிறுவனத்தின் பிரதானியும் கூறியிருந்தார்.
இன்று லுபிட்ஸின் பின்புலம் பற்றி விசாரிக்கும் உத்தியோகத்தர்கள், அவருக்கு மன அழுத்தம் இருந்திருக்குமா என்பதன் மீது கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.
தீவிர மன அழுத்தம் என்பது சடுதியான தீர்மானங்களுக்கு வித்திடுமென உளவியல் நிபுணர்கள் கூறுவார்கள். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் திடீரென தற்கொலை செய்து கொள்வது வியப்பான விடயம் அல்ல என்பது அவர்களின் கருத்து.
லுபிட்ஸின் இல்லத்தில் இருந்து தடயங்கள் தேடப்படுகின்றன. தற்கொலை குறித்த எதுவித குறிப்புக்களும் இதுவரை கிடைக்கவில்லை. இருந்தாலும், நோய் பற்றிய சிறுகுறிப்புகள் மீட்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த 27 வயதுடைய மனிதர் தமக்குள்ள நோயை தாம் வேலை செய்யும் நிறுவனத்திற்கு மறைத்திருக்கலாம் என்பது பிந்திய கணிப்பு.
இந்த விடயத்தின் மீது விமானச் சேவை நிறுவனங்கள் கூடுதல் கவனம் செலுத்துவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
ஒரு விமானிக்கு தொழில் ரீதியாக அல்லது தனிப்பட்ட ரீதியாக பிரச்சினைகள் எழலாம். அத்தகைய பிரச்சினைகள், அவரது தொழிலில் எத்தகைய தாக்கத்தை செலுத்தும் என்பதை விமானச் சேவை நிறுவனங்கள் அறிந்து வைத்துள்ளன. அதன் காரணமாக, எத்தகைய சலுகைகளை வழங்க முடியுமோ, அத்தகைய அனைத்து சலுகைகளும் விமானிகளுக்கு வழங்கப்படுவதைக் காணலாம்.
அவற்றையும் தாண்டி பல விதிமுறைகள் அமுலாகின்றன. விமானிகள் எதுவித தொந்தரவும் இல்லாமல் விமானத்தை செலுத்துவதற்கும், விமானிகளின் அறைகளுக்குள் வேறு நபர்கள் ஊடுருவதைத் தடுப்பதற்கும் பல சட்டதிட்டங்கள் அமுலில் உள்ளன.
செப்டெம்பர் 11 சம்பவத்தைத் தொட ர்ந்து கொக்பிற் கதவுகள் பலப்படுத்தப்பட்ட விதத்தையும் நினைவு கூரலாம். எறிகுண்டு வீசியெறியப்பட்டாலும் உடையாத விதத்தில் கொக்பிற் கதவுகள் வடிவமைக்கப்பட்டன.
கொக்பிற் கதவைத் திறப்பதற்குரிய கருவிகளில் சங்கேத இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அதற்குள் நுழையும் எவரும் விமானியின் அனுமதியைக் கோர வேண்டும். சரியான சங்கேத இலக்கத்தை அழுத்தினால் மாத்திரமே அனுமதி கிடைக்கும்.
ஜேர்மன்- விங்ஸ் விமானத்தைப் பொறுத்தவரையில், இந்த விடயம் மாறி நடந்திருக்கிறது. தலைமை விமானி வெளியே இருக்கும் சந்தர்ப்பத்தில், துணை விமானி உள்ளே இருந்து விமானத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருக்கிறார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விமானச் சேவை நிறுவனங்கள் புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்திருக்கின்றன. சகல சந்தர்ப்பங்களிலும் கொக்பிற்றில் இருவர் இருப்பதை உறுதி செய்யும் வகையிலான விதிமுறை பிரதானமானது. இதன் பிரகாரம், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விமானத்தின் கட்டுப்பாடு தனியொருவரிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது.
இதில் பிரதானமான விடயம் யாதெனில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய விமானச் சேவை நிறுவனங்களுக்கு இடையிலுள்ள வித்தியாசம் தான். கொக்பிற்றில் இரு விமானிகள் இருக்க வேண்டும் என்ற நியதியை அமெரிக்க விமானமோட்டிகள் சங் கம் 2002ஆம் ஆண்டிலேயே அறிமுகம் செய்தது.
ஐரோப்பிய விமானச் சேவை நிறுவனங்களில் அது கட்டாயமாக்கப்படவில்லை. ஜேர்மன்- விங்ஸ் விமான விபத்தைத் தொடர்ந்து, நோர்வே உள்ளிட்ட பல நாடுகள் அத்தகைய விதிமுறைகளை அனுசரிக்கத் தொடங்கியுள்ளன.
விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமாயின், ஒவ்வொரு நாடும் தனித்தனியாக விதிமுறைகளை அமுலாக்குவதில் அர்த்தமில்லை என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இதற்கு சர்வதேச ரீதியிலான நியமங்கள் அவசியம் என்பது அவர்களின் கருத்து.
ஒவ்வொரு தடவையும் விமான விபத்து நிகழும் சமயம், அதற்குரிய காரணங்களை ஆராய்கிறார்கள். அந்தக் காரணத்திற்காக பரிகாரம் தேடுகிறார்கள். அத்தகைய பரிகாரம் ஒரு நாட்டுக்கோ, கம்பனிக்கோ மட்டுப்படுத்தப்படுகிறது. இது ஆரோக்கியமானது அல்ல என்று விமானப் போக்குவரத்து துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்த வாதம் உண்மை என்றே தோன்றுகிது. மலேஷிய எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எம்.எச்.-370 விமானத்திற்கு என்ன நடந்தது என்று கண்டு பிடிக்கப்படும் பட்சத்தில், புதிய காரணம் சொல்லப்படலாம். அதற்கு பரிகாரமும் முன்வைக்கப்படலாம். அது சர்வதேச ரீதியான பரிகாரமாக அமைய வேண்டியது முக்கியமானது என்பதையே இப்போதைக்கு கூற வேண்டியதாக இருக் கிறது.
Social Buttons