Latest News

March 05, 2015

சர்ச்சைக்குரிய படத்தை பிபிசி ஒளிபரப்பியிருக்கக் கூடாது!
by Unknown - 0

இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டுள்ள ஆவணப்படத்தை பிபிசி ஒளிபரப்பியிருக்கக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பாலியல் வல்லுறவு புரிந்த குற்றவாளி முகேஷ் சிங்கின் பேட்டி அடங்கிய இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்பியமை துரதிஷ்டவசமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

பிபிசியின் குறித்த ஆவணப்பட ஒளிபரப்பின் மூலம் ஏதாவது விதிமுறை மீறல்கள் ஏற்பட்டிருந்தால் அதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குற்றவாளி ஒருவரின் கருத்து இடம்பெற்றுள்ள இந்த ஆவணப்படத்தை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று தான் கேட்டுக்கொண்ட பின்னரும், அது ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளமை மனவருத்தத்தை அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நேற்று இதே விவகாரம் தொடர்பாக இந்திய மாநிலங்கள் அவையில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்பு செய்யத் தடை உத்தரவு பெற்றிருப்பதாக கூறினார்.
அத்தோடு, பேட்டி எடுப்பதற்கு முன் உடன்பட்டிருந்த நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க ஆவணப்படத்தை உருவாக்கியவர்கள் தவறிவிட்டனர் என்றும் அவர் குறிப்பிடிருந்தார்.

அதேநேரம், மாநிலங்களவை உறுப்பினர்களான அணு அஹா, ஜாவேத் அக்தர் போன்றோர் ஆவணப் படத்திற்கு ஆதரவான குரலை ஒலித்தார்கள்.
இந்தப் பேட்டியை இந்தியாவில் ஒளிபரப்ப ஊடக நிறுவனங்களுக்கு தடை விதிக்கும் நீதிமன்ற உத்தரவினை தில்லி போலீஸார் பெற்றுள்ளனர்.

ஆனால் பிரிட்டனில் பிபிசி-4 இந்த ஆவணப்படத்தை நேற்று புதன்கிழமை இரவு, அதாவது இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஒளிபரப்பு செய்துள்ளது. தொடர்ந்து அதே ஆவணப்படம் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் இணையத்தில் இடம்பெற்றுள்ள இந்த ஆவணப்படம் இந்தியாவிலும் சமுகவலைத்தளங்கள் மூலமாக பரப்பப்பட்டு வருகிறது.

பிபிசியின் ஆவணப்படத்தில், பாலியல் வல்லுறவுக் குற்றவாளி முகேஷ் சிங் தனது குற்றத்திற்காக கவலைப்படவில்லை. அத்தோடு, பாலியல் வல்லுறவுக்கு உள்ளான பெண் எதிர்த்திருக்கக்கூடாது என்றும் விமர்சித்திருக்கிறார்.

யூடியூப் தளம் படத்தை நீக்கியுள்ளது

இதனிடையே, பிபிசியின் சம்பந்தப்பட்ட ஆவணப்படத்தை தமது வலைத்தளத்திலிருந்து நீக்கியுள்ளதாக யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.

'தகவல்களை பெற முடிகின்றமை சுதந்திரமான சமூகமொன்றின் அடித்தளம் என்றும் யூடியூப் போன்ற சேவைகள் மக்கள் தங்களின் கருத்துக்களையும் பல்வேறுபட்ட நிலைப்பாடுகளையும் பகிர்ந்துகொள்வதற்கு உதவுகின்றது என்றும் நாங்கள் நம்புகின்ற அதேவேளை, சட்டவிரோதமானவை என்றும் எங்களின் சமூக வழிகாட்டல் நெறிகளை மீறுவதாகவும் எமக்கு அறிவிக்கப்படும் விடயங்களை நாம் நீக்கிவருகிறோம்' என்று யூடியூப் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் இந்தப் படம் தடைசெய்யப்பட்ட விவகாரமும், இந்தப் படத்தில் பாலியல் வல்லுறவுக் குற்றவாளியின் கருத்து இடம்பெற்றிருந்தமையும் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் ஏற்படுத்தியுள்ள சர்ச்சைகள், இந்திய செய்தி ஊடகங்களில் முக்கிய விவாதப்பொருளாக உருவெடுத்துள்ளன. சமூகவலைத் தளங்களிலும் ஆதரவான மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் பதிவுகள் பரப்பப்பட்டு வருகிறன.

குறிப்பாக, இந்திய செய்தி தொலைக்காட்சிகள் பலதரப்பட்ட பிரபலங்களின் கருத்துக்களை கேட்டறிந்து வருகின்றன. அதில் கருத்துக்கூறிய பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத், ஆவணப்படத்துக்கு ஆதரவான கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டார்.

அனைத்திந்திய ஜனநாயக மகளிர் அமைப்பு போன்ற பெண்கள் பாதுகாப்பு அமைப்புகளும் பிபிசியின் ஆவணப்படத்துக்கு ஆதரவான செய்தி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

பிரிட்டனில் ஒளிபரப்பான இந்த ஆவணப்படத்தை இயக்கிய லெஸ்லி அட்வின், தனது நிகழ்ச்சியை ஆதரித்துப் பேசியுள்ளார்.


நன்றி BBC Tamil
« PREV
NEXT »