Latest News

March 02, 2015

உடைகிறதா ஆம் ஆத்மி?
by Unknown - 0

தனிநபர் ஒருவரைச் சுற்றியே கட்சி வளர்கிறதோ என ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களான பிரசாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதிய விவகாரம் வெடித்த பின்னணியில் தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்க முயற்சிகள் நடப்பது தெரிய வந்துள்ளது.

இதனால் கட்சி உடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, அங்கு மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. முதல் முறை சொதப்பினாலும் கூட அதை மறந்து, மன்னித்து 2வது வாய்ப்பு டெல்லிமக்கள் ஆம் ஆத்மிக்குக் கொடுத்துள்ளனர். அதை உணர்ந்து, ஆட்சியில் அமர்ந்ததும் தான் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது அக்கட்சி.

இந்நிலையில், கடந்த 6ம் தேதி அக்கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கட்சிக்குள் முன்னணி தலைவர்கள் பலர் தங்களது அதிருப்திகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி தலைவர்களான பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர், கெஜ்ரிவாலுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளனர். அதில், அவர்கள் " நமக்காக உழைத்த தொண்டர்கள் தான் கட்சியின் வெற்றிக்கு காரணம். ஆனால் அவர்களுக்கு தர வேண்டிய பாராட்டை நாம் தரவில்லை. மீண்டும் ஒரு தனி நபரை சுற்றியே நமது கட்சியும் வளர்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

கட்சிக்கு சந்தேகத்திற்கிடமான நான்கு கம்பெனிகளிடம் இருந்து பெறப்பட்ட தலா 5 லட்சம் ரூபாய்க்கு என்ன கணக்கு இருக்கிறது. 10 லட்சத்திற்கும் மேல் கிடைக்கும் நிதியை யார் அனுப்பினாலும், அவர்கள் நேர்மையானவர்கள் தானா என விசாரிக்க வேண்டும். ஆனால் 20 லட்சம் ரூபாய் பெறப்பட்ட விஷயத்தில் நாம் சரியாக விசாரிக்கவில்லையோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது'' என குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக டெல்லி சட்டசபை தேர்தல் வேட்பாளர் தேர்விலும் தங்கள் அதிருப்தியை இத்தலைவர்கள் வெளிப்படுத்தினர். 12 வேட்பாளர்களுக்கு கிரிமினில் பின்னணி இருப்பதாக ஒரு பட்டியலை பூஷண் அளித்தார். இதில் இருந்து 2 பேர் மட்டுமே நீக்கப்பட்டனர்.

இதுவும் பூஷணுக்கு வெறுப்பை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. இந்த நிலையில் யோகேந்திர யாதவ் இன்று போட்டுள்ள ஒரு டிவிட்டில், ‘சிறுபிள்ளைத்தனமான அரசியல் நமது மாபெரும் பணிகளுக்கு குறுக்கே வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்று கோரியிருந்தார். கடிதமும் எழுதி விட்டு, இப்படியும் அவர் டிவிட் போட்டுள்ளது குழப்புவதாக உள்ளது. யாதவ் மற்றும் பூஷண் கடிதங்களுக்கு கட்சி மேலிடம் இதுவரை பதில் அனுப்பவில்லையாம்.

கெஜ்ரிவாலை நீக்க முயற்சி இந்த நிலையில் கட்சித் தலைவர் பதவியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்க முயற்சிகள் நடந்து வருகிறதாம். இதுதொடர்பாக நாளை டெல்லியில் கூடும் கட்சித் தலைவர்கல் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவுள்ளதாம். அப்படி நடந்தால் கட்சி உடையும் என்கிறார்கள். 

மேலும் பிரஷான்த் பூஷணும், யோகேந்திர யாதவும்தான் கெஜ்ரிவாலை நீக்கும் நடவடிக்கைகளுக்கு பின்னால் உள்ளனராம். இந்த நிலையில் கெஜ்ரிவாலை நீக்க முயற்சிகள் நடப்பதை கட்சி செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங்கும் ஒத்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து சிங் கூறுகையில், " சிலர் கட்சியை கேலிக்கூத்தாக்கி விட்டனர். மூத்த தலைவர்கள் சிலர் கெஜ்ரிவாலை நீக்க முயல்கின்றனர். அப்படி நடந்தால் கட்சியை எப்படி நடத்துவது என்பது குறித்து தேசிய செயற்குழுவைக் கூட்டி விவாதிப்போம் என்றார்.
« PREV
NEXT »