நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19ம் திருத்தச் சட்டம் தொடர்பிலான உத்தேச வரைவுத் திட்டத்திற்கு சற்று முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த உத்தேச யோசனைத் திட்டம் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு பிரசூரிக்கப்பட உள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் வழமையான முறையில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அவசர சட்ட மூலமாக இந்த சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி இரண்டு தடவைகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாது எனவும், பாராளுமன்றம் நிறுவப்பட்டு ஓராண்டுக்கு பின்னர் அதனை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது, புதிய திருத்தங்களின் அடிப்படையில் நான்கு ஆண்டுகள் செல்லும் வரையில் பாராளுமன்றை கலைக்க முடியாது எனத் தெரிவிக்கப்படுகிறது. சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதல் தொடர்பிலும் புதிய சட்டத் திருத்தங்களில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி படைகளின் சேனாதிபதி, அமைச்சரவையின் பொறுப்பாளர், அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரங்கள் அவ்வாறே தொடர்ந்தம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் முறைமை மாற்றம் குறித்து இறுதித் தீர்மானம் எதிர்வரும் செவவ்வாய்க்கிழமை அளிக்கப்பட உள்ளது. ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரக் கூடிய வகையிலும் திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்வைக்கப்பட்டுள்ள 19ஆவது அரசியல் சட்டத் திருத்த பிரேரணையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
முன்வைக்கப்பட்டுள்ள 19ஆவது அரசியல் சட்டத் திருத்த பிரேரணையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- இலங்கையயில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை அகற்றப்பட்டு, ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றமும் சேர்ந்து நிர்வகிக்கும் ஆட்சி முறையாக இலங்கை மாறும்,
- இனி இலங்கையில் அனைத்து தேர்தலிலும் விகிதாச்சார முறை நீக்கப்பட்டு, ஒவ்வொரு தொகுதியிலும் யார் அதிக வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றிபெற்றவர் என்ற முறை கடைப்பிடிக்கப்படும்.
- ஒருவர் அதிகபட்சமாக இரண்டு ஆட்சிக்காலத்துக்கு மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்ற நிபந்தனை மீண்டும் கொண்டுவரப்படுகிறது.
- ஜனாதிபதியின் ஒரு ஆட்சிக்காலம் என்பது ஆறு ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்படும்.
- நாடாளுமன்றம் தெரிவுசெய்யப்பட்டு ஓராண்டு கடந்துவிட்ட பின்னர், அதனை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்காது. ஒரு நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னர்தான் அதனைக் கலைக்கும் உரிமை மறுபடியும் ஜனாதிபதிக்கு வரும்.
- ஒருவர் ஜனாதிபதியாக இருக்கும்போது அவர் உத்தியோகபூர்வமாக செய்யும் காரியங்களை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு இருந்துவருகின்ற சட்டத் தடை அகற்றப்படும்.
- இலங்கையில் அதிகபட்சமாக 30 பேரே காபினட் அந்தஸ்துடைய அமைச்சர்களாகவும், அதிகபட்சமாக 40 பேரே துணை அமைச்சர்களாகவும் என ஆக மொத்தம் 70 பேரே அமைச்சர்களாக இருக்க முடியும் என்ற வரம்பு ஏற்படுத்தப்படுகிறது.
- 17ஆம் அரசியல் சட்டத் திருத்தம் மீண்டும் நடைமுறைப்படும்.
- நாட்டின் ஆணைக்குழுக்கள் ஜனாதிபதியால் அல்லாமல் சுயாதீனமான முறையில் மீண்டும் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்றும் இந்தத் திருத்தம் அமையும்.
- ஆனாலும், அமைச்சரவையின் தலைவராகவும், முப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் தொடர்ந்தும் ஜனாதிபதியே விளங்குவார்.
- பிரதமரையும் அமைச்சர்களையும் நியமிக்கும் அதிகாரம் தொடர்ந்து ஜனாதிபதிக்கு இருக்கும்.
Social Buttons