Latest News

March 05, 2015

நாடு திரும்பும் தமிழர்களை கைது செய்வதாக குற்றச்சாட்டு
by Unknown - 0

இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் நாட்டில் இருந்து வெளியேறிவர்களை மீண்டும் நாடு திரும்புமாறு புதிய அரசாங்கம் அழைப்பு விடுத்த பின்னர், மத்திய கிழக்கு, அவுஸ்திரேலியா, இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து நாடு திரும்பிய சுமார் 10 தமிழர்கள், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாத்திரம் இவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பின் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது தாயை பார்ப்பதற்காக 10 வருடங்களுக்கு பின்னர் இலங்கை திரும்பிய 41 வயதான ஒரு பிள்ளையின் தாய் ஒருவர் அண்மையில் கட்டுநாயக்க விமானத்தில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

பிரான்சில் இருந்து தாயை பார்க்க சென்று விட்டு தனது 8 வயது மகளுடன் மீண்டும் பிரான்ஸ் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற முருகேசு பகிரதி என்ற பெண்ணை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைது செய்தனர். கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட இந்த பெண் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, தடுப்பு காவல் உத்தரவின் பேரில் 4 வது மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பகிரதி மூன்று வருடங்கள் கடற்புலி உறுப்பினராக இருந்துள்ளதாகவும் அவர் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

1997 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை கடற்புலி உறுப்பினராக இருந்த பகிரதி, படுகாயம் ஏற்பட்டதன் காரணம் அந்த அமைப்பில் இருந்து விலகியுள்ளார். 2003 ஆம் ஆண்டு பிரான்ஸ் குடியுரிமையை பெற்றுக்கொண்ட அவர், இலங்கையர் ஒருவரை தாய்லாந்தில் மணமுடித்து, 2005 ஆம் ஆண்டு பிரான்ஸ் சென்றுள்ளார்.

புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில், நாட்டில் ஏற்பட்டிருக்கும் சுதந்திரமான சூழலை நம்பி, பகிரதி, புற்று நோயால் பாதிக்கப்பட்ட தனது தாயை பார்க்க வந்துள்ளார். பரந்தனில் இருக்கும் அவரது வீட்டுக்கு சென்ற பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், அவரிடம் வாக்குமூலம் ஒன்றையும் பெற்றுக்கொண்டுள்ளனர். 

பகிரதியின் கணவரான சுப்ரமணியம் ஜெயகணேஷ், புலிகளின் சர்வதேச நிதி தொடர்பான நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். எவ்வாறாயினும் பகிரதி சட்டரீதியாக தனது கணவரை விவாகரத்து செய்துள்ளதுடன் கணவரிடம் இருந்து மகளுக்கும் அவருக்கும் மாதந்தம் ஜீவனாம்சம் கிடைத்து வருகிறது.

பகிரதியின் மகள் பிரான்சில் கல்வி கற்று வருவதோடு விடுமுறை முடிந்து கடந்த 3 ஆம் திகதி பாடசாலை ஆரம்பித்துள்ளது. இதனடிப்படையிலேயே பகிரதி கடந்த 2 ஆம் திகதி பிரான்ஸூக்கு புறப்பட்டுச் செல்ல திட்டமிட்டிருந்தார். இது குறித்து பகிரதி வீட்டுக்கு வந்து விசாரணை நடத்திய பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் கூறியிருந்தார். 

பகிரதியின் முன்னாள் கணவரை இலங்கைக்கு கொண்டு வர அவரையோ அவரது மகளையோ தடுத்து வைக்க அதிகாரிகள் எண்ணினால், அது பலன் தராது என பகிரதியின் சகோதரர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் கூறியுள்ளார்.

« PREV
NEXT »