சமூக முன்னேற்றத்திற்காக இளைய சமூகம் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும் -ஈ.பி.டி.பி
EPDP |
மனோபலமும் உடல் உழைப்பும் கொண்டு செயற்படும் சமூகத்தினால் மட்டுமே பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் முன்னேற்றம் காண முடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈ.பி.டி.பியின் தலைமை அலுவலகத்திற்கு வருகைதந்திருந்த இளைஞர் யுவதிகள் மத்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு மனித சமூகம் என்பது தாம் சார்ந்து வாழும் சமுதாயத்தை மேம்படுத்தும் நோக்கிலும் வளர்த்தெடுக்கும் வகையிலும் அர்ப்பணிப்புடன் திட்டங்களை சிறந்த முறையில் செயற்படுத்த வேண்டும்.
அதிலும் குறிப்பாக இன்றைய இளைய சமூகத்தினராகிய இளைஞர்களும், யுவதிகளும் இதனை கருத்தில் கொண்டு செயற்படுவது அவசியமானது.
தற்போது சமூகத்தில் அதிகரித்து காணப்படும் சமூக விரோத மற்றும் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் இளைய சமூகத்தினர் அவை தொடர்பான விழிப்புணர்வுகளையும் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
சமூகத்தில் கல்விகற்று நல்ல நிலையிலுள்ள இளைய சமூகத்தினர் தமக்கு பின்னுள்ள சந்ததியையும் கல்வியில் முன்னேற்றம் காணச்செய்யும் வகையில் அவர்களுக்கான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதன் ஊடாக மாணவர்கள் கல்வியை மட்டுமன்றி நல்லொழுக்கத்தையும் கற்றுக் கொள்ளக் கூடியதான வாய்ப்பையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இவ்வாறாக தாம் சார்ந்து வாழும் சமூகத்தை கல்வி மற்றும் விளையாட்டுத்துறைகளால் உயர்த்தும் அதேவேளை, சமூகத்தில் வாழும் சகல மக்களது வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பும்; அதேவேளை, தாம் சார்ந்து வாழும் வாழும் சமூகத்தில் பல்வேறு முன்னேற்றங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்த முடியும்.
அந்தவகையில், இளைய சமூகத்தினர் மனோபலத்துடன் கூடியதான உடல் உழைப்பையும் சமூக மாற்றத்துக்காகவும் மக்கள் நலன்சார்ந்ததுமான திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்ட செயலாளர் நாயகம் அவர்கள், இவ்வாறான செயற்பாடுகளுக்கு தாம் முழுமையான பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
Social Buttons