Latest News

March 31, 2015

உலகின் மாபெரும் கட்சியாக பாரதிய ஜனதா தெரிவு!
by Unknown - 0


எட்டு கோடியே எண்பது லட்சம் பேரைக் கட்சியில் உறுப்பினர்களாகச் சேர்த்து உலகிலேயே மிகப் பெரிய கட்சி என்ற அந்தஸ்தை இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி பெற்றுள்ளது.

இதுவரை சீன கம்யூனிஸ்ட் கட்சியே உலகின் பெரிய கட்சியாக இருந்தது.
பாரதிய ஜனதா கட்சியை உலகிலேயே மிகப்பெரிய கட்சியாக மாற்ற வேண்டும் என்று அதன் தேசிய தலைவர் அமித்ஷா திட்டமிட்டிருந்தார்.இதைத் தொடர்ந்து நாடெங்கும் பாஜகவுக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது.

உறுப்பினர்கள் சேர்க்கையை எளிமைப்படுத்த செல்போன்களில் “மிஸ்ட்கோல்” கொடுக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மிகவும் வரவேற்பு பெற்ற இத்திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கானவர்கள் பாஜக உறுப்பினர்களாகச் சேர்ந்தனர்.

இது தவிர இணைய தளம் மூலமாகவும் உறுப்பினர்கள் சேர்க்கை நடந்தது. பாஜக தேசிய தலைவர் அமித்ஷா எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களால் கவரப்பட்ட லட்சக்கணக்கானவர்கள் பாஜகவில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். இதன் காரணமாக தற்போது 8 கோடியே 80 லட்சம் பேர் பாஜகவில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இதன் மூலம் பாரதிய ஜனதா கட்சி உலகிலேயே மிகப்பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. இதுவரை உலகிலேயே மிகப்பெரிய கட்சியாக சீனாவின் கம்யூனிஸ்டு கட்சி இருந்தது.

அந்த கட்சியில் 8 கோடியே 30 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அந்தக் கட்சியை பின்னுக்குத் தள்ளி விட்டு 8 கோடியே 80 லட்சம் உறுப்பினர்களுடன் பாஜக முதல் இடத்துக்கு வந்துள்ளது.

பாஜக வுக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது. நாளையுடன் உறுப்பினர் சேர்க்கை நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 10 கோடியாக உயர்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில மாநிலங்களில் உறுப்பினர் சேர்க்கைக்கான கடைசி நாள் மேலும் சில மாதங்களுக்கு தள்ளி வைக்கப்படலாம் என்று தெரிகிறது. என்றாலும் பா.ஜ.க.வின் மொத்த உறுப்பினர்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் 3 அல்லது 4 ஆம் தேதிகளில் பெங்களூரில் நடக்கும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் அறிவிக்க அமித்ஷா திட்டமிட்டுள்ளார்.

நாட்டிலேயே உத்தரபிரதேசம் மாநிலத்தில் அதிக பட்சமாக ஒரு கோடியே 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். குஜராத், மத்திய பிரதேசம் மாநிலங்களில் தலா 80 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் உறுப்பினர்கள் சேர்க்கையைத் தீவிரப்படுத்த பாஜக தீர்மானித்தது. ஆனால் தமிழ்நாட்டில் பாஜக தலைமை எதிர்பார்த்த அளவுக்கு உறுப்பினர்களைச் சேர்க்க இயலவில்லை.
« PREV
NEXT »