சம்பளம் 800 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும்
அ.இ.தோ.தொ.ச. தலைவர் ராமலிங்கம் சந்திரசேகர்
இம் மாதம் 31 ஆம் திகதியுடன் கூட்டு ஒப்பந்தம் காலாவதியாவதால், தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென தற்போது அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.
ஆனால் தோட்டத் தொழிலாளர்களின் தலைவர்களென கூறிவரும் தொழிற்சங்க தலைவர்கள் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான நிலைப்பாட்டை இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை எனினும் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாட்சம்பளத்தை 800 ரூபாவாக அதிகரிக்கவேண்டும் என உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளது என அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 800 ரூபாவை கொடுக்க வேண்டும் என முதலாளித்துவ சம்மேளனத்தை வழியுறுத்தி மக்களை தெளிவூட்டும் துண்டுப்பிரசுர விநியோகம் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் அட்டன் நகரில் விநியோகிகப்பட்டபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
1999 முதல் 2013 வரையிலான கூட்டு ஒப்பந்தம் மூலமாக சம்பளம் நிர்ணயிக்கப்பட்ட போதிலும் அது ஒரு தடவையாவது வாழ்வதற்கு போதுமான சம்பளமாக அதிகரிக்கப்படவில்லை. நிர்ணயிக்கப்பட்ட சம்பளமும் உரிய வகையில் கிடைக்காது வெட்டப்படுகின்றது. 2013இல் தோட்டத் தொழிலாளர்களின் சகல கொடுப்பனவுகளுடன் அடங்கிய 620 ரூபா 30-35 சதவீதமான தொழிலாளர்களுக்கே கிடைக்க கூடியதாயிருக்கின்றது. பெருவாரியான தொழிலாளர்களுக்கு வரவுக்கான கொடுப்பனவான 140 ரூபாய் கிடைப்பதில்லை. கிடைக்காத வகையிலும் இலக்கை அடையாத முடியாத வகையிலுமே இந்த சம்பள முறை அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவுக்கான கொடுப்பனவு கிடைக்காத தோட்ட தொழிலாளர்கள் 3500 ரூபாவை மாதாந்தம் இழந்துள்ளனர். அதன் காரணமாக பெருவாரியான தொழிலாளர்களுக்கு மாத வருமானம் வெறும் 11250 ரூபாய் மட்டுமேயாகும்.
கடந்த 15 வருடங்களாக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற சம்பளத்தை பெற்றுக்கொள்வதற்கு இந்த கூட்டு ஒப்பந்த செயல்முறைகளால் முடியாது போயுள்ளது. அதேபோன்று தோட்டத் தொழிலாளர்கள் பிறப்பிலிருந்து இறப்பு வரையில் சகல கருமங்களையும் இந்த கூட்டு ஒப்பந்தத்தில் இறுக்கப்பட்டு பல அரசியல் வாதிகளினதும் தொழிற்சங்க தலைவர்களினதும் தேவைகளின் நிமித்தம் தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருவது இந்த கூட்டு ஒப்பந்த நடைமுறையாலாகும். அதனால் இதை மாற்றியமைத்தாக வேண்டும். அதை நீண்ட நாள் வேலைத்திட்டத்தின் மூலமாகவே சாதிக்க முடியும்.
மலையகத்தில் பாரம்பரிய தொழிற்சங்கம் என கூறும் நபர்கள் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றுக்கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கின்றார்கள். அவ்வாறு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படுமாயின் அது தொடர்பாக மகிழ்ச்சியடைவது நாங்கள் மாத்திரமே ஆகும் என்றார்.
Social Buttons