Latest News

March 03, 2015

மாமனிதர் வைத்திய கலாநிதி தி. கங்காதரன் ஐயா அவர்கள் காலமானார்.
by admin - 0

மாமனிதர் வைத்திய கலாநிதி தி. கங்காதரன் ஐயா அவர்கள் 02.03.15 அன்று காலமானார்.
ஈழத் தமிழ் மண்ணில் கொடிய போர் நடந்த வேளை நான்கரை இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்த வன்னிமண்ணில் ஓய்வடையும் வயதில் பதின்நான்கு வருடகாலமாக ஓய்வின்றி
சேவையாற்றினார்.
மகப்பேற்று நிபுணர்கள் காது மூக்கு தொண்டை நிபுணர்கள் எவருமற்ற ஐந்து மாவட்டங்கள் இணைந்த வன்னிப்பெருநிலத்தில் தனித்து நின்று தன் இளம் தமிழீழ வைத்தியர் குழாமின் ஆசானாகவும் ஆலோசகனாகவும் தனது மக்களுக்குச் சேவை செய்தார்.
கட்டாய ஓய்வெடுக்கவேண்டிய 80 வயதில் கூட பளிச்சிடும் முழுப்பல்வரிசைகள் தோன்றும் புன்னகையுடன் அழைத்த இடமெங்கும் சென்று தாய் சேய் உயிர்காக்கும் சிசேரியன் அறுவைச் சிகிச்சைகளையும்
அனைத்துப் பெண்நோயியல் அறுவைச் சிகிச்சைகளையும் காது மூக்கு தொண்டை அறுவைச் சிகிச்சைகளையும் பொது மருத்துவ சிகிச்சைகளையும் செய்து பல இலட்சம் நோயாளர்களுக்கு சிகிச்சை செய்தார்.
மலேரியாவில் நடுங்கியபடி வந்து அவசர பிரசவ சத்திரசிகிச்சையில் அவர் காப்பாற்றிய பல தாயும் பிள்ளையும் இன்று உலகில் ஏதேனும் ஓர் மூலையில் இச்செய்தி அறிந்து கலங்குவர்.
நூற்றுக்கணக்கான மாணவர் வகுப்புகளையும் பயிற்சிகளையும் கொடுத்து தனது இடத்தை நிரப்ப ஒரு மருத்து குழாமையும் வளர்த்தார்.
கைகள் நடுங்காமல் மிகவும் வேகமாகவும் சரியாகவும்
சத்திரசிகிச்சை செய்து முதுமைக்கு சவாலாக இயங்கினார்.
தனது சேவையை முழுமையாகவும் இலவசமாகவும் செய்தார்.
பசுமை ஆசையும் தோட்டமும் செய்து பல குடும்பங்களுக்கு வாழ்வளித்தார்.
பல தென்னங்கன்றுகளையும் விதைகளையும் மக்களுக்கு வழங்கி பசுமையை ஊக்குவித்தார்.
புல்லாங்குழலிசையால் மக்களை மகிழ்வித்தார். இசையரங்குகளில் மேடையேறினார். சுகாதார விஞ்ஞானக் கல்வி நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.
தனது கைகளால் செய்த புல்லாங்குழல் இசைப் பயிற்சிக்காக தனது கைகளால் செய்த ட்ரான்சிஸ்டர் வானொலிக் கருவியைப் பயன்படுத்திய சகலகலாவல்லவர்.
இனிப்பு பரிமாறினால் இரண்டு வேண்டும் என்று எடுத்து ஒன்றை தன் அன்பு மனைவிக்குக் கொண்டுபோவார்.
இவ்வளவு சேவை செய்வதற்கு அவரை எப்போதும் வழியனுப்பும் தாயாக திருமதி கங்காதரன் அம்மையார் வாழ்ந்தார். 
மாமனிதர் வைத்திய கலாநிதி திரு தி. கங்காதரன் ஐயாவையும் பாரியாரையும் 50 ஆண்டு கடந்த அயராத மருத்துவசேவைக்காகவும் 80 வது பிறந்த தினத்தையும் முன்னிட்டு
தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் சிறப்பு கெளரவம் வழங்கி கொண்டாடினார்.
தெய்வீகக் களைவீசும் புன்னகை கொண்ட எங்கள் மாமனிதரின் வழி தமிழீழ மருத்துவ வரலாற்றின் மகுடம்.
சேவைகளுக்கெல்லாம் சிகரம்.
மனித நேயத்தின் உச்சம்.
« PREV
NEXT »