Latest News

February 27, 2015

ததேகூ மீதான புலம்பெயர் தமிழர்களின் விமர்சனம் ஏன்?
by Unknown - 0

இலங்கை மீதான ஐநாவின் விசாரணை அறிக்கை வெளியீடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு-இலங்கையிலும் பிரிட்டனிலும் நடைபெற்ற போராட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு எதிரான கோசங்களும் எழுப்பப்பட்டிருந்தன.

குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சம்பந்தன் ஆகியோரின் உருவப்படங்களும் சில போராட்டங்களில் எரிக்கப்பட்டிருந்தன.

லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக சில தினங்களுக்கு முன்னதாக நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போதும் இரண்டு தலைவர்களின் உருவப்படங்களும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் எரிக்கப்பட்டிருந்தன.

அதற்கு முன்னர், இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் புலம்பெயர் தமிழர்களின் ஆர்ப்பாட்டத்தில் இருவரது படங்களும் எரிக்கப்பட்டிருந்தன.

ஐநாவுக்கும் அமெரிக்காவுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் எதிராக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களின் உருவப்படங்கள் எரிக்கப்படுவதற்கு என்ன காரணம் என்னவென்று லண்டனில் போராட்டத்தை ஒழுங்குசெய்திருந்த பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர் சசி மகேந்திரனி்டம் பிபிசி தமிழோசை கேள்வி எழுப்பியது.

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தமிழர்களின் உரிமைகள் பற்றியும் தமிழ்த் தேசத்தின் விடுதலை பற்றியும் தேர்தல் மேடைகளில் கோசங்களை எழுப்பி எமது வாக்குகளை எடுத்துவிட்டு இன்று எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பது தான் எமது மக்களின் ஆட்சேபனைக்கு' காரணம் என்று சசி மகேந்திரன் கூறினார்.

குறிப்பாக, எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இரா. சம்பந்தன் ஆகியோரின் அண்மைக்கால செயற்பாடுகள் திருப்தியளிக்கும் விதத்தில் இல்லை என்றும் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர் சசி மகேந்திரன் தெரிவித்தார்.

இதனிடையே, புலம்பெயர் தமிழ் உறவுகள் நாட்டில் தமிழ் மக்களின் நிலைமையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைமையையும் உணராமல் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் விசனம் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கூட விளையாட்டுப் போட்டி நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்துள்ள யோகேஸ்வரன், 'தாங்கள் எடுக்கும் முடிவுகளை ஏற்று அதன் அடிப்படையிலே நாங்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று புலம்பெயர் உறவுககளால் வலியுறுத்த முடியாது..மக்களின் நிலைமை மற்றும் கோரிக்கைகளின் அடிப்படையில் தான் செயற்பட முடியும் என்று கூறியுள்ளார்.

லண்டனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களின் உருவப்படங்கள் எரிக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள யோகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களின் உருவ பொம்மைகளை எரித்து எமது பாதையில் குந்தகம் விளைவிப்பது வேதனைக்குரியது' என்று தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »