இலங்கைதீவில் தமிழினத்தின் மீது சிங்கள அரசுகளினால் நடத்தப்பட்டது ஓர் இனஅழிப்பே என்பதனை வலியுறுத்திய வட மாகாணசபைத் தீர்மானத்தினை வரவேற்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதி கோரி, அனைத்துலக விசாரணை நோக்கிய செயற்பாட்டில், தாயக தேசமும் புலம்பெயர் சமூகமும் கூட்டாக பயணிக்கின்றது என்பதனை, வட மாகாணசபைத் தீர்மானம் எடுத்துக்காட்டி நிற்பமாக நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவைத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்மானத்தின் முழுமையான விபரம் :
வட மாகாணசபையின் மதிப்புக்குரிய முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் முன்மொழிவில், 10-02-2014 அன்று தமிழர் மீது நிகழ்த்தப்பட்டது இனஅழிப்பே என்பதை வலியுறுத்தி, உரிய நேரத்தில் தீர்மானமொன்றை வட மாகாணசபை ஏகமனதாக நிறைவேற்றியிருக்கிறது.
இத்தகையதொரு உறுதியான தீர்மானத்தை நிறைவேற்றியமைக்காக தீர்மானத்தினை சபையில் முன்மொழிந்த மதிப்புக்குரிய முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கும், சபை பிரதிநிதிகளுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது பெருமகிழ்வையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறது.
முன்மொழிவில்
“தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்களால் தமிழ்ப் பேசும் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கு நீதி தேடுவோருக்கு இந்தத் தீர்மானம் உறுதியாக இருக்கும்” “வரலாற்று ரீதியாக இன அழிப்பை எதிர்கொண்டு வந்த நாங்கள் எமது மக்களின் இதுவரையான உள்ளக் குமுறல்களை உலக அரங்கிலே கொட்டித் தீர்த்து நீதியைச் சர்வதேச விசாரணை மூலம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்”
என அமைந்துள்ள இவ்வாக்கியங்கள், தமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதி கோரி அனைத்துலக விசாரணை நோக்கிய செயற்பாட்டில் தாயக தேசமும் புலம்பெயர் சமூகமும் கூட்டாக பயணிக்கின்றது என்பதனை எடுத்துக்காட்டி நிற்கின்றது.
“இரண்டாம் உலகப் போரில் இன அழிப்பைச் செய்தவர்கள் தற்போதும் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவது எந்தக் காலகட்டத்திலும் நீதி மறுக்கப்படக்கூடாது என்ற உலக மக்களின் சிந்தனைச் சிறப்பின் எதிரொலியே” எனும் முன்மொழிவின் வாக்கியங்கள் எமக்கான நீதிக்கு அனைத்துலக மக்களின் மனச்சாட்சியினை நிச்சயம் தட்டியெழுப்பும்.
வட மாகாணசபை முதலமைச்சர் அவர்களினால் முன்மொழியப்பட்ட தீர்மான வாக்கியங்கள் ,ஈழத்தமிழர் தேசத்தின் நீதிக்கான வேண்டுதலையும் தமிழனப் படுகொலைக்கான அனைத்துலக விசாரணையின் அவசியம் குறித்த புரிதலையும் நன்கு உள்வாங்கி தயாரிக்கப்பட்ட ஒரு சிறந்த ஆவணமாகவும் அமைகிறது.
இது மதிப்புக்குரிய முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் அரசியல் முதிர்ச்சியினையும் ஆளுமையினையும் வெளிப்படுத்துகிறது. இந்தகையதொரு சிறப்புமிகு தீர்மானத்தை நிறைவேற்றித் தந்தமைக்காக முதலமைச்சர் மற்றும் சபையோரினை நாம் மனமுவந்து பாராட்டுகிறோம்.
கடந்த காலத்தில் ஈழத்தமிழர் விவகாரத்தினை மையப்படுத்தி, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் முன்மொழிவில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானமானத்தினையும் இவ்வேளையில் நாம் நினைவிருத்திக் கொள்கின்றோம்.
இந்நிலையில் நீதிக்கான குரலாக வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இத் தீர்மானம் ,அனைத்துலக சமூகத்தின் செவிப்பறைகளை உரக்கத்தட்டும் என நாம் நம்புகின்றோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Social Buttons