Latest News

February 11, 2015

இலங்கை மீதான சர்வதேச விசாரணை நடைமுறைகளுக்கு மதிப்பளிக்கவேண்டும்- பிரதமர் வி ருத்திரகுமாரன்
by Unknown - 0

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் திட்டமிட்டப்படி எதிர்வரும் மார்ச் 25ம் திகதியன்று இலங்கை மீதான சர்வதேச விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும் இதனடிப்படையில் பரிந்துரைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தி செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாடு கடந்த தமிழீழு அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பியுள்ள கடிதங்களில் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

அதில் உறுப்பு நாடுகள், இலங்கை மீதான சர்வதேச விசாரணை நடைமுறைகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் போரின் போது கொல்லப்பட்டவர்களின் சார்பில் அவர்களுக்கு நீதியும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் வருந்திக்கொண்டிருக்கும் குடும்பத்தினர் சார்பிலும் இந்தக் கோரிக்கையை விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஒருபோதும் போர்க்குற்றம், மனிதத்துவத்துக்கு எதிரான இனப்படுகொலை என்பவற்றை ஏற்றுக்கொள்ளமுடியாது.

இந்தநிலையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை தோல்வியடையுமானால், சர்வாதிகாரி அல்லது அரசாங்கம் ஒன்றுக்கு தமது மக்கள் மீது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட வாய்ப்பை வழங்கிவிடும் என்று ருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ருவாண்டாவில் ஐக்கிய நாடுகள் சபை கண்ட தோல்வியையும் இலங்கையில் படுகொலைகளை தடுக்க ஐக்கிய நாடுகளுக்கு முடியாமல் போனமையை பாடமாகக்கொண்டு செயற்படவேண்டும்.

தற்போதைய இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில்,  அது முன்னைய அரசாங்கத்தை விட வித்தியாசப்பட்டதல்ல. இன்றைய அரசாங்கம் இன்னமும் இராணுவ சூன்யத்தை மறுக்கிறது.

இராணுவத்துக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்க அது ஏற்பாடுகளை செய்து வருகிறது. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பட்டியல்களை தர மறுக்கிறது. உள்ளுரில் இடம்பெயர்ந்த 50ஆயிரம் பேரின் மீள்குடியேற்றத்தை மறுக்கிறது. காணாமல் போனோர் தொடர்பில் இன்னும் சரியான எண்ணிக்கையை வழங்கவில்லை.

இந்தநிலையில் இலங்கையில் படுகொலைகளை யார்? ஏன்? எப்போது? மேற்கொள்ளப்பட்டது என்ற உண்மையை கண்டறிந்து நீதி மற்றும் பொறுப்புக்கூறலை சர்வதேசம் எங்கும் உள்ள பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஐக்கிய நாடுகளின் விசாரணைகளில் இருந்து எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

எனவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமது பொறுப்பு மற்றும் கடமை என்ற அடிப்படையில் தமிழர்கள் தொடர்பில் சர்வதேசத்திடம் நடவடிக்கைகளை எதிர்ப்பார்ப்பதாக ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்
« PREV
NEXT »