சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றத்தில் ஆட்கள் மாறியுள்ளனரே அன்றி நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவில்லை என்ற கருத்தினை பிரான்ஸ் தமிழ் சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள் கருத்துரைத்துள்ளனர்.
சிறிலங்காவின் ஆட்சிமாற்றமும தமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதி கோரலும் எனும் தலைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவாகரங்கள் அமைச்சினால் தலைநகர் பரிசில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தாடல் நிகழ்விலேயே இக்கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தமிழ் சமூகத்தளத்தில் இயங்குகினற் பல்வேறு சமூக அரசியல் அமைப்பு பிரதிநிதிகள் அரசியல் ஆர்வலர்கள் பலர் இக்கருத்தாடல் நிகழ்வினை அமைச்சர் சுதன்ராஜ் அவர்கள் தலைமை தாங்கி நடத்தியிருந்தார்.
முதற்சுற்றில் சிறிலங்காவின் ஆட்சிமாற்றம் தொடர்பிலான கருத்துக்களை ஒவ்வொருவரும் முன்வைத்திருந்தனர்.
– மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான வாக்குகளே தற்போதைய அரசுத் தலைவரின் வெற்றிக்கு வழிசமைத்திருந்ததே அன்றி மைத்திரியின் நிலைப்பாட்டுக்கு கிடைத்த வாக்குகள் அல்ல.
– தமிழர் பகுதிகளில் சுற்றுச்சூழல் பிரச்சனைகள், ஆழ ஊடுரிவியுள்ள இராணுவ கட்டமைப்பின் பிரசன்னம் ஆகியனவற்றுக்குள் ஆட்சிமாற்றம் உடனடியாக கிடைத்துள்ள இக்குறுகியகால வெளிக்குள், அங்குள்ள சமூக அமைப்புக்கள் காத்திரமான பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
– ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு சுதந்திரத்தினை வழங்கிவிட்டது போன்ற மாயையினை ஏற்படுத்தும் வகையில் புலம்பெயர் ஊடங்களில் வெளிவரும் செய்திகளின் பொறுப்பற்ற போக்கும், அதன் ஊடாக சமூகத்தின் மத்தியில் ஏற்படக்கூடிய அரசியல் வெறுமை.
– அங்குள் மக்கள் சார்ந்து புலம்பெயர் மக்கள் அணிதிரள வேண்டும்.
– ஆட்சிமாற்றத்தின் ஊடாக தற்காலியமாக ஏற்பட்டுள்ள தளர்வுநிலைக்குள் நாம் எதனைச் செய்யப் போகின்றோம் என்பது பற்றி தெளிவு. சர்வதேசத்தின் நலன்கள் ஊடாக எங்கள் நலன்களை வென்றடைவது எவ்வாறு.
ஆகிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.
சிறிலங்காவின் அரசுத் தலைவர் தேர்தல் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை பிரதமர் பிரான்ஸ் பணிமனை இயக்குனர் நாயகம் வே.மனோகரன் அவர்கள் முன்வைத்திருந்தார்.
தொடர்ந்து தமிழினப்படுகொலைக்கான பரிகாரநீதியினை வென்றடைவது தொடர்பில் கருத்துப்பரிமாற்றப்பட்டிருந்தது.
குறிப்பாக ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரினை மையப்படுத்தி முன்நகர்வுகள் குறித்து கருத்தாடப்பட்டிருந்ததோடு, தமிழர்களுக்கான நீதியினை வென்றடைவதற்கான ஒன்றுபட்ட தளத்திலான கூட்டுச்செயற்பாட்டுக்கு தொடர்சியான கருத்துப்பரிமாற்றத்தின் அவசியம் குறித்து பலராலும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
நிகழ்வின் நிறைவுரையினை துணை அமைச்சர் மகிந்தன் அவர்கள் முன்வைத்திருந்ததோடு இக்கருத்தாடலின் தொடர்சியினை எதிர்வரும் மார்ச்1ம் நாளன்று தொடர்வதென முடிவு எடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை பிரான்சின் புறநகர் பகுதியான பனியூ நகரின் தமிழ்சங்க ஆண்டுவிழாவில் அமைச்சர் சுதன்ராஜ் அவர்கள் புலம்பெயர் சமூகத்தளத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வகிபாகம் குறித்து உரையாற்றியுள்ளார்.
Social Buttons