வெளிநாடுகளில் புகலிடம் பெற முயற்சிகளை மேற்கொண்டு திருப்பியனுப்படுபவர்கள் விடயத்தில் முன்னைய அரசாங்கம் பின்பற்றிய கொள்கைகளையே இலங்கையின் புதிய அரசாங்கமும் பின்பற்றும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா சென்ற புகலிடக்கோரிக்கையாளர்களை அந்த நாடு வியாழக்கிழமை இலங்கை கடற்படையினரிடம் ஓப்படைத்துள்ள நிலையிலேயே அமைச்சர்pன் இந்த கருத்து வெளியாகியுள்ளது.இவர்கள் வழமைபோன்று நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளவுள்ளனர்.
இந்த மாதம் கொக்கோஸ் தீவிற்கு வடக்கே இடைமறிக்கப்பட்ட படகிலிருந்தவர்களையே அவுஸ்திரேலியா இலங்கை கடற்படையிடம் ஓப்படைத்துள்ளது.அவர்களை நடுக்கடலில் வைத்து அவுஸ்திரேலிய அதிகாரிகள் விசாரணைசெய்ததாக தெரியவருகின்றது. இலங்கைக்கு திருப்பியனுப்படுபவர்கள் கொழும்பு விமானநிலையத்திலோ அல்லது துறைமுகத்திலோ வைத்து கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவது வழமை.பின்னர் இவர்கள் மீது சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறிய குற்றச்சாட்டு சுமத்தப்படுவது வழமை.
அமைச்சர் விஜயதாச ராஜபக்ச புகலிடக்கோரிக்கையாளர்கள் குறித்து கொள்கை மாற்றமொன்றை மேற்கொள்ளும் எண்ணம் புதிய அரசாங்கத்திற்கில்லை. இது குறித்து நாங்கள் இன்னமும் ஆராயவில்லை, இது எங்களது 100 நாள் திட்டத்தில் இல்லை,இதனால் இந்த விடயத்தில் தற்போதைக்கு கொள்கை மாற்றமிராது,திருப்பியனுப்பபடுபவர்கள் இலங்கையின் நீதி நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நடைமுறை குறித்து மனித உரிமை அமைப்புகள் கடந்த காலங்களில் கடும் கண்டனம் வெளியிட்டு வந்துள்ளன.இவ்வாறு திருப்பியனுப்படுபவர்கள் கடும் சித்திரவதைகளை எதிர்நோக்குவதாக அவை பல ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி வந்துள்ளன.
சட்ட விரோதமாக பயணம் செய்ய முயன்ற வர்கள் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் விடுவிக்கப்பட்டாலும், அவர்கள் நீண்ட கால நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது,பல மைல் தொலைவிலிருந்து மாதத்திற்கு ஓரு முறையாவது நீதிமன்றத்திற்கு வரவேண்டியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த வருடம் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் திருப்பி அனுப்பட்ட ஓருவர் தன்மீதான வழக்கு முடிவடைவதற்கு 5 வருடங்களாகலாம் என தனது சட்டத்தரணிகள் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கைக்கு திருப்பியனுப்பட்டுள்ள நால்வரையும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் நடுக்கடலில் வைத்து விசாரணை செய்துவிட்டு இலங்கை கடற்படையினரிடம் ஓப்படைத்தமையும் கடும் சர்ச்சையை உண்டுபண்ணியுள்ளது.
நடுக்கடலில் வைத்து புகலிடக்கோரிக்கையாளர்களை விசாரணை செய்யும் நடைமுறை குறித்து அவுஸ்திரேலியாவிலும், சர்வதேச அளவிலும் கடந்த காலங்களில் பலத்த கண்டனங்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் அந்த நாட்டு நீதிமன்றம் இந்த நடவடிக்கை சரியானது என தீர்ப்பளித்ததை தொடாந்து அந்த நாடு அதனை தொடர்கின்றது.இந்த நடைமுறைக்கு யுஎன்எச்சீஆர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இவ்வாறு புகலிடக்கோரிக்கையாளர்களை விசாரணை செய்வதை தரையிலேயே மேற்கொள்ளவேண்டும்,
மேலும் இந்த நடைமுறை புகலிடக்கோரிக்கையாளர்கள் விளங்கிக்கொள்ள கூடியதாகவும், அவர்கள் தங்கள் பிரச்சினைகளை தெளிவு படுத்தகூடியதாகவும் அமையவேண்டும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் இந்த நடவடிக்கைக்கு தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. புகலிடக்கோரிக்கையாளர்களை நடுக்கடலில் விசாரணை செய்வது சர்வதேசசட்டங்களுக்கு முரணாணது,புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு கேள்விகள் கேட்பதற்கும், சட்டத்தரணிகளை வைத்து வாதாடுவதற்கும்,உரிமையுள்ளதாக கருதுகிறேன் என அந்த அமைப்பின் பாலா விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment