Latest News

February 26, 2015

தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்பட்டுவிட்டது-கருணாவின் கண்டுபிடிப்பு
by Unknown - 0

இலங்கையில் நடந்ததை இன அழிப்பு என்று சொல்ல முடியாது என தெரிவித்துள்ள கருணா அம்மான் எனப்படும் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் இலங்கையில் சர்வதேச விசாரணை அவசியமற்றது என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசின்  தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று (26.02.15) மாலை வழங்கிய நேரடி பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்றும் அதனை உலக நாடுகளில் இடம்பெற்ற இனப்படுகொலையுடன் ஒப்பிட முடியாது என்றும் தெரிவித்த கருணா அம்மான் விடுதலைப் புலிகளும் 10ஆயிரம் சிங்கள மக்களை படுகொலை செய்தாகவும் குறிப்பிட்டார். 

இலங்கையில் நடந்த அழிவுகளுக்கு சிங்களத் தலைவர்கள் பொறுப்புக்கூட வேண்டும் என்றும் அதேவேளை தமிழ் தலைவர்களும் இதற்குக் காரணம் என்றும் குறிப்பிட்ட அவர் 83 இனக்கலவரத்தை சிங்கள தலைவர்கள் தவிர்த்திருந்தால் இந்த நிலமை நேரிட்டிருக்காது என்றார். 

மீண்டும் புலிகள், மீண்டும் பிரபாகரன் வருவார் என அஞ்சத் தேவையில்லை என்றும் வட கிழக்கில் பலமான இராணுவம் உள்ளதாகவும் தெரிவித்த கருணா சிறீலங்கா  சுதந்திரக்கட்சியினர் புலிப் பீதியூட்டுவதை ஒப்புக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

கருணா அம்மான்  புலம்பெயர் மக்களை நிராகரிப்பதன் மூலம், வட கிழக்கு மக்களின் பிரச்சினை தீர்ந்துவிட்டது என எவ்வாறு கருதுவது என  கேட்டபோது, தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்பட்டுவிட்டது என்றும் மாகாண சபையே அந்த தீர்வு என்றும் கருணா அம்மான் பதில் அளித்தார். 

இதேவேளை தனிநாடு சாத்தியமில்லை என்றும்  செப்டம்பர் 11 உலக வர்த்தக மைய தாக்குதலின் பின்னர் தான் இந்த முடிவுக்கு வந்ததாகவும் அவர் கூறினார். 
2004ஆம் ஆண்டில் ஒஸ்லோவில் சமஷ்டிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தான் வலியுறுத்தியதாகவும்  அதனால் பிரபாரகன் தன்னை துரோகம் இழைத்தாக கடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன் காரணமாகவே தான் பிரிந்ததாக குறிப்பிட்ட கருணா தலமைத்துவ பதவிகளுக்காக தாம் பிரியவில்லை என்றும் அதனை பொருட்படுத்தாது போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். 

முன்னைய காலங்களில் வடக்கு கிழக்கில் பாரபட்சம் இருந்தது என்றும் அது போராட்ட காலத்துடன் இல்லாமல் போனது என்றும் இப்போது அவ்வாறான நிலமை இல்லை என்றும் வட கிழக்கு மக்களில் பிரிவில்லை என தான் ஏற்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கையின் பிரச்சினையை உள்ளக ரீதியாக தீர்த்து கொள்வதே உகந்தது என்று தெரிவித்த கருணா அம்மான், கடந்த கால அரசு அதை முறைப்படி செய்திருந்தால் சர்வதேசம் இப்போது விசாரணை செய்யாது என்றும் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச தலையீடு தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும் என்றும் இப்போது மூவினமக்களும் மகிழச்சியாக வாழ்வதாகவும் சர்வதே விசாரணையை மூவின மக்களும் விரும்பவில்லை என்றும் கருணா இதன்போது குறிப்பிட்டார். 

பல ஜனாதிபதிகளிடமிருந்து  யுத்தத்தின் மூலம் நாட்டை பிடித்தமையால் பிரபாகரன்மீது ஈடுபாடு ஏற்பட்டதாக தெரிவித்த கருணா அம்மான் பின்னர் முழுநாட்டையும் பிடித்த ராஜபக்சமீது அதிக ஈடுபாடு  ஏற்பட்டதாகவும் மேலும் கூறினார். 

« PREV
NEXT »