Latest News

February 13, 2015

இரண்டு மணிநேரமாக நீடிக்கிறது கோட்டபாய மீதான விசாரணை
by admin - 0

இராணுவப் புரட்சிக்கு முயற்சித்தமை, இரகசிய ஆயுதக் களஞ்சியசாலை நடத்தியமை, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். 
 
இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஆரம்பிக்கபட்ட விசாரணை ஸ்ரீலங்கா நேரப்படி மாலை 5 மணிவரை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும்  எனினும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை காவல்துறை ஊடகப் பிரிவு இதுவரை வெளியிடவில்லை என்றும் எமது கொழும்பு செய்தியாளர் தெரிவித்தார்.
 
இராணுவப் புரட்சிக்கு முயற்சிகளை மேற்கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய இருவரையும் விசாரணை செய்வதற்கான ஆலோசனையை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து பெறுவதற்கு காத்திருப்பதாக காவல்துறை நேற்று அறிவித்திருந்தது.
 
இந்த நிலையில் தற்போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் அதிகமாக இந்த விசாரணை இடம்பெற்று வருவதாக தகவல்கள் மேலும் குறிப்பிடுகின்றன.
 
இதேவேளை ரத்ன லங்கா ஆயுதக் களஞ்சியசாலையை இரகசியமான முறையில் நடத்தியமை, நிதி மோசடிகளை செய்தமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களும் கோட்டாபய ராஜபக்ஷ மீது சுமத்தப்பட்டுள்ளது.
 
மேலும் பாதுகாப்பு செயலாளராக பதவிவகித்தபோது இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் கோட்டாபயவுக்கு எதிராக ஜே.வி.பியினர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதுடன், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு ஆகியவற்றிலும் முறைப்பாடுகளைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments