டெல்லி தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ள பாஜகவை, கூட்டணி கட்சியான சிவசேனா, ஆம் ஆத்மியின் விளக்குமாறால் பெருக்கி தள்ளப்பட்ட குப்பை என கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றது. அந்த கட்சி மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. பாஜக 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் கட்சியோ ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போய்விட்டது.
கடந்த தேர்தலில் 32 இடங்களை பெற்று முதலிடம் பிடித்த பாஜக இந்த தேர்தலில் வெறும் 3 தொகுதிகளிலே வெற்றி பெற்றது நாடு முழுவதும் உள்ள தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியை குறிவைத்து எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் பாஜகவின் கூட்டணியில் உள்ள கட்சிகளும் தங்களது பங்குக்கு அக்கட்சியின் மீது தாக்குதலைத் தொடுத்துள்ளது. பாஜகவின் நீண்ட நாள் நட்பு கட்சியான சிவசேனா, ஆம் ஆத்மியின் விளக்குமாறால் பெருக்கி தள்ளப்பட்ட குப்பையாகிவிட்டது பாஜக என்று கடுமையாக சாடியுள்ளது.
தேர்தல் வாக்குறுதி மற்றும் பேச்சால் மட்டும் வெற்றி பெற முடியாது என்பது பாஜகவுக்கு ஒரு பாடமாகும் என்று சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது.
மேலும், "முழக்கமிடத்தக்க பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, குப்பையாக மாறிவிட்டது. அது ஆம் ஆத்மியின் துடைப்பத்தால் பெருக்கி தள்ளப்பட்டுவிட்டது.
பாஜக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பதை எண்ணுவதற்கு கூட பாஜகயினருக்கு விரல்கள் தேவையில்லை. தோல்வியை கிரண் பேடியின் மீது போடுவது சரியானது இல்லை" என்று சிவசேனா கட்சி தனது கட்சி பத்திரிக்கையான சாம்னாவில் தெரிவித்துள்ளது.
"தேர்தல்களில் வெறும் பேச்சு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளால் மட்டும் வெற்றி பெற முடியாது. இந்தத் தேர்தல் கட்சிக்குள்ளேயே அமைதியின்மையை கொண்டுவந்துள்ளது. அமித் ஷா தனது மேஜிக்கை மக்கள் மத்தியில் கட்டுவதில் தோல்வி அடைந்துவிட்டார். தேர்தல் முடிவுக்கு, மோடியை கட்சி ஆயுதமாக பயன்படுத்தியதும் மிகவும் தோல்வி அடைந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளது.
"மோடி என்ற பெயரிலே தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டது. இது பிரதமர் மோடியின் தோல்விதான் என்று அன்னா ஹசாரே கூறிவிட்டார். நாங்களும் இதைத்தான் உணர்கிறோம். இந்த வழிமுறைகள் மற்ற மாநிலங்களில் மோடிக்கு வெற்றியை கொடுத்தது என்பதால் அவர்கள் அதனையே டெல்லியிலும் பயன்படுத்தினர் என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
தோல்வியை சாடிய சிவசேனா, மத்திய அரசையும் விடவில்லை. அரசியலில் டெல்லி தேர்தல் முடிவு புதிய யுகத்தை தொடங்கியுள்ளதா? ஏன் மக்கள் பாஜகவை விட்டு செல்கிறார்கள்? வேலையின்மை சதவீதம் நாட்டில் குறையவில்லை, பணவீக்கம் தொடர்ந்து இருக்கிறது. வீடு இல்லாதவர்கள் வீடுகளை பெறவில்லை மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று சிவசேனா கூறியுள்ளது.
பிரதமர் மோடி மற்றும் பிற பாஜக தலைவர்கள் தங்களது பிரச்சாரத்தின் போது, ராகுல் காந்தி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்தனர். இறுதியில், பாஜக எதிர்மறை பிரச்சாரத்தின் விளைவை தாங்க வேண்டியநிலை வந்துவிட்டது என்று சிவசேனா குறிப்பிட்டுள்ளது.
Social Buttons