மாணவர் கடத்தலில் கடற்படையைச் சேர்ந்த லெப்டினன்ட் கொமாண்டர் சம்பத் முனசிங்க தொடர்புபட்டுள்ளமைக்கு சான்றுகள் உண்டு என்று ஐந்து மாணவர்கள் கடத்தப்பட்ட வழக்கில் சாட்சியமளித்த கொழும்பு புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி ரஞ்சித் முனசிங்க தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.
2008 ஆம் ஆண்டு தெஹிவளையில் கடத்தப்பட்ட ஐந்து மாணவர்களின் ஆட்கொணர்வு மனு விசாரணையில் மனுதாரர்களின் சார்பில் ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா கொழும்பு புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியான ரஞ்சித் முனசிங்கவின் சாட்சியத்தை நெறிப்படுத்திய போதே அவர் இவ்வாறு கூறினார்.
தெஹிவளையில் 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணியளவில் மூன்று தமிழ் இளைஞர்களும் அவர்களது நண்பர்களான இரண்டு முஸ்லிம் இளைஞர்களும் பயணம் செய்த வாகனத்தோடு கடத்தப்பட்டனர்.
கடத்தப்பட்டு காணாமல்போன மாணவர்களின் பெற்றோர்களை மனுதாரர்களாக பெயர் குறிப்பிட்டு சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட வேளையில் சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவையடுத்து கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஐந்து இளைஞர்களில் கடத்தப்பட்ட மாணவன் ராஜீவ் நாகநாதனின் தாயார் சரோஜா நாகநாதனும் கடத்தப்பட்ட மாணவன் பிரதீப் விஸ்வநாதன் சார்பில் அவரது தந்தையார் விஸ்வநாதனும் கடத்தப்பட்ட மாணவனான திலகேஸ்வரன் ராமலிங்கம் சார்பில் அவரது தாயார் காவேரி ராமலிங்கமும் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவரும் தற்பொழுது உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றுபவருமான எம்.ஏ. ஜயதிலகவும் கடந்த தவணைகளில் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் சாட்சியம் அளித்திருந்த நிலையில் கொழும்பு புலனாய்வுப் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியான ரஞ்சித் முனசிங்க தனது சாட்சியத்தில்
முன்னாள் கடற்படைத் தளபதியும் தற்போது ஜப்பான் நாட்டின் தூதுவருமான அட்மிரல் வசந்த கரன்னகொட கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் சம்பத் முனசிங்க தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து செயல்படுகின்றார் என பொலிஸ் மாஅதிபருக்கு 2009ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி செய்த முறைப்பாட்டினை விசாரணை செய்கையில் கடற்படையைச் சேர்ந்த லெப்டினண்ட் கமாண்டர் சம்பத் முனசிங்கவிற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லையெனவும் தெஹிவளையில் கடத்தப்பட்ட ஐந்து மாணவர்களின் கடத்தல் சம்பவத்தில் தொடர்புபட்டுள்ளமைக்கு சான்றுகள் உள்ளன.
கொழும்புக் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சந்தேக நபரான கடற்படையைச் சேர்ந்த லெப்டினன்ட் கொமாண்டர் சம்பத் முனசிங்கவினால் பாவிக்கப்பட்ட அறையிலிருந்து முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்ன கொடயின் அடையாள அட்டை, வெடி குண்டுகள் கொமர்ஷல், சம்பத், இலங்கை வங்கிகளின் சேமிப்புப் புத்தகங்கள், காசோலைகள், காணாமல் போனவர்களின் தேசிய அடையாள அட்டைகள், காணாமல் போனவர்களின் கடவுச்சீட்டுக்கள், சோனி எரிக்சன் சிம்அட்டைகள் உட்பட 21 தடயப் பொருட்களை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றி பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய கொழும்பு புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்ததையடுத்து மேலதிக விசாரணைகளை தாங்கள் நடாத்தி விசாரணை அறிக்கைகளை கொழும்புக் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும் சாட்சியமளித்தார்.
தெஹிவளையில் கடத்தப்பட்ட ஐந்து மாணவர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களா-? என்ற சந்தேகத்தில் விசாரணைகளை நடத்தியதாக பொறுப்பதிகாரி ரஞ்சித் முனசிங்க சாட்சியமளித்த பொழுது சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா சாட்சியிடம் கடத்தப்பட்ட ஐந்து மாணவர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உண்டென சான்றுகள் உண்டா என வினவியபோது ஐந்து மாணவர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென சாட்சியமளித்தார்
மனுதாரர்கள். சார்பில் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவின் அனுசரணையில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா ஆஜராகியதுடன் பிரதிவாதிகளுக்காக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சவீந்திர பெர்னாண்டோ ஆஜரானார் .
கொழும்பு பிரதான நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய மேலதிக விசாரணையை பெப்ரவரி 23ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
Social Buttons