Latest News

February 26, 2015

தமிழின அழிப்பின் பங்காளி மைத்திரி லண்டன் வருகையை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டம்!
by admin - 0

இலங்கை அரசாங்கத்தின் வெளி முகங்கள் மாறி இருந்தாலும் உட்கட்டமைப்புக்கள் எதுவும் மாறவில்லை . 100 நாள் செயல் திட்டத்தில்தமிழர்கள் அனுபவிக்கும் பிரச்சினைகள் அடக்கப்படவில்லை. வட கிழக்கில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்படவில்லை. தமிழர் பிரதேசங்களில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் திருப்பி வழங்கப்படவில்லை. நீண்டகாலமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபட்டுள்ள அரசியல் கைதிகள் நீதி விசாரணையின்றி சிறைகளில் வாடுகின்றார்கள். சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட தம் உறவுகளை தேடியலையும் பெற்றோர் மற்றும் வாழ்க்கைத் துணைவர்களுக்கு அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்ற செய்தியைக் கூட புதிய அரசினால் சொல்ல முடியவில்லை.
ஆனால் இதுவரை இருந்த அரசாங்கம் மாதிரியே இந்த அரசாங்கமும் சர்வதேசத்தில் தாங்கள் தமிழருக்கு நன்மை செய்கிறோம், தமிழர்கள் தங்களை ஏற்று கொண்டுவிட்டார்கள் என்று பொய் பிரசாரங்கள் செய்து வருகின்றது. புதிய அரசாங்கம் என்பதாலும் புதிய அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கை தமக்குச் சாதகமாகவிருப்பதாலும் சர்வதேசம் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க தீர்மானித்துள்ளது. தொடர்ச்சியான இன அழிப்புக்குள்ளாகியுள்ள தமிழினத்தைப் பாதுகாப்பதை விட புதிய அரசினைப் பாதுகாப்பதென்பதே மேற்குலகின் முன்னுரிமையாகவுள்ளது. மென்போக்கான முகத்தைக் காட்டி தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தினை நீர்த்துப் போகச் செய்யும் சிரிசேனா அரசின் பாணி மிகவும் ஆபத்தானது.
இந்த நிலையில் நாம் எம் மக்களுக்கான நீதி முடக்கப்படுவதையும சர்வதேச நீதி விசாரணையை இழுத்தடித்து உள்ளாக விசாரணையாக இலங்கை அரசின் பொறுப்பில் விட்டு இறுதியில் முற்றாக கைவிடப்படும் சதி திட்டத்தை புதிய ஆட்சியாளர்கள் அரங்கேற்றுவதை அம்பலப்படுத்த வேண்டும். அண்மைய காலங்களில் தாயக மக்கள் தங்கள் அவலங்களை வெளிப்படையாக ஆர்ப்பாட்டங்கள் .பேரணிகள் வடிவில் தெரிவிக்க தொடங்கி உள்ளார்கள். அவர்களுக்கு நாம் உறுதுணையாக நின்று போராடுபவர்களுக்கு பாதுகாப்பு அரணாக மாற வேண்டும்.
இனப் படுகொலை செய்தது மகிந்த மட்டும் தான் என்ற தோற்றப்பாட்டை வெளிப்படுத்தும் இந்த மைத்திரிபால சிறிசேனா தான் இனப்படுகொலை உச்சமாக நடந்த வேளையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர். இவரது அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்து இவரது அரசில் அங்கம் வகிக்கும் சரத் பொன்சேகா தான் போர் நடந்த காலத்தில் இராணுவ தளபதியாக இருந்தவார். இவர்களும் இனப்படுகொளையாளிகளே.
அந்த வகையில், ராஜபக்ஸவுடன் அண்மைக் காலம் வரை இன அழிப்பில் இணைந்திருந்த இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனா வருகிற மாதம் 7 ஆம் திகதியளவில் லண்டன் வர உள்ளதாக அறிய வந்துள்ளது. இதற்கு பாரிய எதிர்ப்பை காட்டி அவரை வெளியேற்றும் போராட்டம் ஒன்றை செய்ய தீர்மானித்துள்ளோம்.
இனப்படுகொலை விசாரணையை பிற்போட வைத்த இந்த இனப்படு கொலையாளிக்கு நாம் எமது பெரிய எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். நாம் காட்டும் எதிர்ப்புஆட்சி மாற்றமோ அல்லது ஆள் மாற்றமோ நீதி விசாரணையை சர்வதேசம் கை விடக் கூடாதெனும் செய்தியை தெளிவாகப் புரிய வைக்க வேண்டும்.
எதிர்ப்பு போராட்டம் பற்றிய விபரங்கள் விரைவில் அறிய தருவோம், தயராக இருங்கள் எமதருமை மக்களே
நன்றி 

பிரித்தானிய தமிழர் பேரவை
« PREV
NEXT »