Latest News

January 12, 2015

ஶ்ரீலங்காவில் இரண்டு பிரதமர்கள் இரண்டாகிய இலங்கை
by admin - 0

சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் டி.எம்.ஜெயரட்ண பதவியில் இருந்து விலக மறுத்து வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன புதிய அதிபராகப் பதவியேற்றதும், ரணில் விக்கிரமசிங்கவை புதிய பிரதமராக நியமித்திருந்தார்.

ஆனால், முன்னாள் பிரதமர் டி.எம்.ஜெயரட்ண தனது பதவியை விட்டு விலக மறுத்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க நாடாளுமன்றத்தில், பெரும்பான்மை ஆதரவு அவருக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மை பலத்தை நிரூபித்தால், தாம் பதவி விலகத் தயார் என்றும் டி.எம்.ஜெயரட்ண தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றம் வரும் 20ம் நாள் கூடவுள்ளது.

இந்தநிலையில், நாடாளுமன்றத்தில் புதிய பிரதமர் ஆதரவைப் பெறும் வரை அதிபர் மைத்திரிபால சிறிசேன காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, ஏற்கனவே ஒரு பிரதமர் பதவியில் இருக்கும் நிலையில், அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமித்தது, அரசியலமைப்புச்சட்டத்துக்கு முரணானது என்று சிறிலங்காவின் மூத்த சட்ட நிபுணர் ஒருவரும் தெரிவித்துள்ளார்.

சட்டரீதியாக இன்னமும் டி.எம்.ஜெயரட்ணவே பிரதமர் பதவியில் இருப்பதாகவும் கூறிய அவர், அவர் அந்தப் பதவியில் இருக்கும் போது மற்றொருவர்  நியமிக்கப்பட்டது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய பிரதமர் பதவியில் இருந்து விலகினால் மட்டுமே, புதிய பிரதமர் ஒருவரை நியமிக்கும் அதிகாரம் சிறிலங்கா அதிபருக்கு உள்ளது.

அதேவேளை, புதியவர் ஒருவரைப் பிரதமராக நியமிக்க வேண்டும் என்றால், ஏற்கனவே பதவியில் இருக்கும் பிரதமரை விலகுமாறு கோரி சிறிலங்கா அதிபர் கடிதம் அனுப்ப முடியும் என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.

« PREV
NEXT »

No comments