யாழ். ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் செவ்வாய்க்கிழமை (20) பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களை யாழ்ப்பாண பொலிஸார் அழைத்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான பாலச்சந்திரன் கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம், கந்தையா சர்வேஸ்வரன், சந்திரலிங்கம் சுகிர்தன், இமானுவல் ஆர்னோல்ட், காரைநகர் பிரதேச சபை தவிசாளர் வே.ஆனைமுகன் ஆகியோரையே விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் திகதி யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் இரு கட்சி உறுப்பினர்களும் காயமடைந்தனர். தமது உறுப்பினர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தாக்கி காயம் ஏற்படுத்தியதாக ஈ.பி.டி.பி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தது. அந்த முறைப்பாட்டின் பிரகாரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை விசாரணைக்கு வருமாறு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Social Buttons