இலங்கையில் புதிய ஜனாதிபதியின் தலைமையில் உருவாக்கப்படவிருக்கும் அமைச்சரவையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்கேற்பது தொடர்பில் கூட்டமைப்பிற்குள் எவ்விதமான பேச்சுவார்த்தைகளும் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை என சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் புதிய அமைச்சரவை சில நாட்களில் உருவாக்ப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் குறித்த அமைச்சரவையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அங்கத்துவம் பெறுமா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழர் அரசியல் வரலாற்றில் தமிழரசு கட்சியாக இருக்கட்டும், தமிழர் விடுதலை கூட்டணியாக இருக்கட்டும் பின்னர் வந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக இருக்கட்டும். அனைவருமே தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காக போராடினோமே தவிர, அமைச்சுக்களுக்காக அல்ல.
நாங்கள் அவ்வாறு அமைச்சுக்களை பெற்றுக்கொண்டு நக்குண்டு நாவிழந்தால், நாளை தமிழ் இனமே எம்மை தூற்றும் நிலை நிச்சயமாக உருவாகும். எனவே இந்த விடயத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ன முடிவினை எடுக்கப்போகின்றது. என்பது தொடர்பில் கூட்டமைப்பிற்குள் எவ்விதமான பேச்சுக்களும் நடத்தப்படவில்லை.
அவ்வாறு பேச்சுக்கள் நடத்தப்பட்டதன் பின்னர் அது குறித்து நாங்கள் உண்மையான நிலைப்பாடு என்ன மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பது தொடர்பில் தெரிவிக்க முடியும் என்றார்.
Social Buttons